வெள்ளி, 1 செப்டம்பர், 2017

5.6 லட்சம் கோடியில் நதிகள் இணைப்புத் திட்டம் - முதல் திட்டத்திற்கு விரைவில் அமைச்சரவை ஒப்புதல்! September 01, 2017

5.6 லட்சம் கோடியில் நதிகள் இணைப்புத் திட்டம் - முதல் திட்டத்திற்கு விரைவில் அமைச்சரவை ஒப்புதல்!



பாஜகவின் கனவுத்திட்டங்களில் ஒன்று நதிகள் இணைப்புத்திட்டம். இதற்கான யோசனைகள் 2002ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போதே தொடங்கியது. அதன்பிறகு, நதிகள் இணைப்பிற்கு ஆகும் செலவும், சூழலியல் கேடுகள், சுற்றுச்சூழல் எதிர்ப்பு உள்ளிட்ட முக்கியமான எதிர்ப்புகள் காரணமாகவும், அரசியல் சூழ்நிலைகள் காரணமாகவும் திட்டம் முடங்கி இருந்தது.

தற்போது, மீண்டும் நதிகள் இணைப்பு உயிர் பெறத்துவங்கியுள்ளது. முதல்கட்டமாக உத்திரப்பிரதேசத்தில் உற்பத்தியாகும் கென் நதியும்,  மத்தியப்பிரதேசத்தில் உற்பத்தியாகும் பத்வா நதியும் முதற்கட்டமாக இணைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 12 அலுவகங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

இந்தத்திட்டம் 22 கி.மீ நீளமுள்ள கால்வாய் மூலம் இணைக்கப்பட உள்ளது. இந்தத்திட்டத்தின் மூலம் 9000 ஹெக்டேர் நிலம் நதிக்காக இணைக்கப்படும். இதில், பெரும்பகுதி ஒருபகுதியாக அரசு கையகப்படுத்தவுள்ள நிலத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா புலி காப்புக்காட்டில் உள்ள சுமார் 6000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இந்தத்திட்டத்தை முன்னோடியாக வைத்து சுமார் 60 நதிகளின் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் முன்னுரிமை கொடுத்து நதிகள் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

ஒருபக்கம் வறட்சி அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் தேசத்தின் பெரும் பகுதிகள் வெள்ள பாதிப்பில் சிக்கித்தவிக்கின்றன. இந்த வேறுபாட்டை களைப்வதற்கு கங்கை, நர்மதா, கோதாவரி, மகாநதி ஆகியவற்றின் கிளை நதிகளை இணைப்பது மட்டும் தான் ஒரே வழி என்று மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த கென் நதி 425 கி.மீ நீளமுடையது. இதில், வழித்தடத்தில் பன்னா காப்புக்காடு பகுதியும் அடக்கம். இந்த காடுகளில் 6.5% அழிக்கப்பட்டு அணை கட்டப்பட உள்ளது. அந்த பகுதியில் இருக்கும் 10 கிராமங்கள் இடம்மாற்றப்பட்டு 2000 குடும்பங்கள் மறுகுடியேற்றம் செய்யப்பட இருக்கின்றனர்.
விரைவில் அமைச்சரவை இந்தத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க உள்ளது. அதன்பிறகு, பிரதமர் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். 

இதன் பிறகு பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிராவில் உள்ள பார்-தபி மற்றும் நர்மதா, தாமன் கங்கா - பிஞ்சா நதிகள் இணைப்புத்திட்டம் முன்னுரிமை கொடுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.