வெள்ளி, 1 செப்டம்பர், 2017

​கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா - இன்று இல்லை! September 01, 2017


​கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா - இன்று இல்லை!


அனிதா குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர். குழுமூர் கிராமம், அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊர். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர் அது.

 அனிதாவும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். ஒடுங்கிய ஓட்டை கூடுதான் அவருக்கு வீடு. வேறு எந்த சொத்தும் இல்லாத பாமர குடும்பம்.  குழுமூரில் அந்த காலத்தில் துவங்கிய கிறித்துவ மிஷனரிப் பள்ளி உண்டு. அது தான் அந்த சுற்று வட்டாரப் பகுதியின் ஏழை மக்களுக்கு கல்வி அளிக்கும் கல்வி புகலிடமாக இருந்துள்ளது. அந்தப் பள்ளியில், தன் உயர் நிலைக்கல்வியை பெற்றார் அனிதா. 10ம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள், அவரையும் அவரது கனவையும் மேலும் உயர்த்தியது.

பத்தாம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 478. கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99. தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் எடுத்தார்.

இந்த மதிப்பெண்ணிற்கு அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் கட்டண சலுகையில் இடம் அளித்தார்கள். அந்தப் பள்ளியில் சேர்த்தற்கு  இதை விட ஒரு முக்கியக் காரணம் காரணம் என்ன தெரியுமா? அனிதாவின் வீட்டில் கழிப்பறை கூட கிடையாது.

படுக்கத்தரை, ஒழுகாமல் இருக்க கூரையும் மட்டுமே இருக்கும் அவரது வீட்டில் இருந்து ஒரு மாற்றாக விடுதியில் சேர்ந்து படிக்கலாம் என்பதற்காகவே அப்பள்ளியில் சேர்ந்தார் அனிதா.

12ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அனிதா. வயிற்றில் வறுமையையும், நெஞ்சில் கனவையும் சுமந்துகொண்ட 12ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் 1176. இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194. கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அனிதாவின் பொறியியல் கட்-ஆப் 199.75. மருத்துவ கட்-ஆப் 196.5.

கடந்த ஆண்டு போல 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால் அனிதா தேர்வு பெற்றிருப்பார். காரணம் அவரது கட் ஆப் மதிப்பெண் 196.5. அதிலும் சிறந்த மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும்.

ஆனால் நீட் தேர்வால் அனிதாவின் கல்வி எதிர்காலம் பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு எழுதினார். பெற்ற மதிப்பெண் 86. அனிதாவின் மருத்துவப் படிப்பு கனவு, நீட் தேர்வால் கருக்கப் பட்டது. வேறு வழியில்லாமல் அவரது தந்தையின் வழிகாட்டல் படி, கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்ந்த அனிதா மன அழுத்தத்திலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மருத்துவராகி பிறரின் உயிரையும் உடலையும் காக்க வேண்டும் என்று நினைத்த அனிதாவின் கனவும், உயிரும் இப்போது தூக்கில் தொங்கியிருக்கிறது.

இறந்தது அனிதா. தூக்கில் தொங்கியது அவரது கனவு. குற்றவாளி யார்?