சனி, 9 செப்டம்பர், 2017

கவனக்குறைவால் பறிபோகும் உயிர்கள்..! September 09, 2017

கவனக்குறைவால் பறிபோகும் உயிர்கள்..!


திருச்சி மணப்பாறை பகுதியில் கவனக்குறைவால் துப்பாக்கிகள்  கையாளப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் உட்கோட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, புத்தாநத்தம் மற்றும் வளநாடு என 5 காவல்நிலையங்கள் உள்ளன. இவற்றில், விளை பொருட்களைப் பாதுகாக்கவும், காட்டு விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும், விவசாயிகள் சிலருக்கு துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகளை தவறாக கையாளுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகள் மருங்காபுரி, வளநாடு, வீரமலை, நடுப்பட்டி, கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பொதுமக்கள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவை பெரும்பாலும் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை முறைப்படுத்த அரசு தரப்பில் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பதன் விபரீதமாக, சேத்துப்பட்டி மற்றும் பாலகுறிச்சி ஆகிய இடங்களில் வெடி மருந்துகள்  வெடித்து விபத்துக்கள் நேர்ந்துள்ளன. 

துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை முறையாக வீட்டில் வைத்துள்ளார்களா? உரிமம் இல்லாத துப்பாக்கிகளை கண்டறிய எந்த முயற்சிகள் எடுக்க போகிறார்கள்? என்பது குறித்து காவலர்கள் ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்தால், விபரீதம் நடக்கும் முன் அரசு தரப்பிலும், மாவட்ட நிர்வாக தரப்பிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Related Posts: