புதன், 13 செப்டம்பர், 2017

டோக்லாம் விவகாரத்தை தொடர்ந்து கைலாஷ் யாத்திரை குறித்த பேச்சுவார்த்தைக்கு தயார்: சீனா அறிவிப்பு! September 12, 2017

​டோக்லாம் விவகாரத்தை தொடர்ந்து கைலாஷ் யாத்திரை குறித்த பேச்சுவார்த்தைக்கு தயார்: சீனா அறிவிப்பு!


டோக்லாம் விவகாரத்தை தொடர்ந்து இந்திய அரசுடன் கைலாஷ் யாத்திரை குறித்த பேச்சுவார்த்தைக்கும் தயார் என சீனா அறிவித்துள்ளது.

இமயமலை தொடரில் கைலாஷ் - மானசரோவரில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. கைலாஷ்- மானசரோவர் கோவிலுக்கு வருடந்தோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது இந்துக்களின் வழக்கம். இதற்காக ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்திய அரசு அனுமதி வழங்குகிறது. இந்நிலையில் யாத்திரை மேற்கொள்பவர்கள் இந்திய- சீன எல்லையின் சிக்கிம் மாநிலம் சென்று நாதுலா கணவாய் வழியாக செல்ல சீனா அரசு அனுமதியளித்திருந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே கடுமையான மோதல் எழுந்த நிலையில், போர் பதற்றமும் தொற்றிக்கொண்டது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாத மத்தியில் ‘நாது லா பாஸ்’ வழியாக கைலாஷ் - மானசரோவர்  யாத்திரை மேற்கொள்ள இந்திய யாத்ரீகர்களுக்கு சீன அரசு தடை விதித்தது.

மத்திய அரசு மேற்கொண்ட பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த மாதம் டோக்லாம் விவகாரம் முடிவிற்கு வந்தது, அதனைத் தொடர்ந்து தற்போது மானசரோவர் யாத்திரை தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் தயார் என சீன அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் கெங் சூவாங் கூறுகையில், டோக்லாம் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே நல்லிணக்கம் ஏற்பட்டதையடுத்து டோக்லாம் விவகாரம் முடிவிற்கு வந்தது, 

இதனைத் தொடர்ந்து தற்போது இந்திய யாத்ரீகர்களுக்கு ‘நாது லா’ வழியாக கைலாஷ்-க்கு யாத்திரை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் கெங் சூவாங் தெரிவித்தார்.

கைலாஷ் யாத்திரைக்கு உத்தரகாண்ட் மாநிலம் லிபுலேக் வழியாக ஒரு வழி உள்ள நிலையில்,  நாது லா வழியாக இரண்டாவது வழியை 2015ஆம் ஆண்டு சீனா திறந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே குறைந்த தூரம் கொண்டதாகவும்,  எளிமையானதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது

Related Posts: