ஞாயிறு, 15 அக்டோபர், 2017

பெங்களூருவில் 115 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை! October 15, 2017

பெங்களூருவில் 115 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை!


பெங்களூரு நகரில் கடந்த 115 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு மட்டும் 1,615.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது, இது இதற்கு முந்தைய அதிகபட்ச அளவான 2005 ஆம் ஆண்டு பெய்திருந்த 1606.8மில்லி மீட்டரைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பருவமழையின் போது மேலும் மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. சாலை முழுவதும் நீரால் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பல இடங்களில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் மழை காரணமாக பெங்களூரு நகர் முழுவதும் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. 

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுடன் இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டதோடு வெள்ளத்தால் பலியானவர்களின் குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பாஜக சார்பாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது, மழைநீரில் வாகனங்கள் தத்தளித்து வருகின்றன.