திங்கள், 16 அக்டோபர், 2017

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகப்படியான நீர் வெளியேற்றம்! October 16, 2017

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகப்படியான நீர் வெளியேற்றம்!


ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபடியான நீர் வெளியேற்றப்படுவதால், 20 கிராமங்களுக்கு 9 வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



தென்பெண்ணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி 3,680 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 4,640 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி 4,640 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடந்த மாதம் 29 ஆம் தேதி அணையிலிருந்து அதிகபட்சமாக 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு தற்போது 4,640 கனஅடி நீர் வெளியேற்றபடுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் அதிகப்படியான நீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறை. அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். கரையோரம் உள்ள பூதிநந்தம், பேரண்டப்பள்ளி, தட்டிகானப்பள்ளி, கோபசந்திரம் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை 9 வது நாளாகத் தொடர்கிறது.

அதேபோல் ஓசூர் அடுத்த பாத்தகோட்டாவில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால் பாத்தகோட்டா, குக்கலப்பள்ளி, ஆழியாளம், ராமாபுரம், உள்ளிட்ட கிராம மக்கள் தரைப்பாலத்தை கடக்கவேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தரைப்பாலத்தை யாரும் கடக்காமல் இருக்க பாலத்தின் இரு மருங்கிலும் தடுப்புகள் அமைத்து கிராம உதவியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தரைப்பாலம் மூழ்கியிருப்பதால் பாத்தகோட்டா, குக்கலப்பள்ளி, ஆழியாளம், ராமாபுரம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.