ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள 3 நாடாளுமன்ற, 2 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஆள்வார், அஜ்மீர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் மண்டல்கர் சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த 29ம் தேதியன்று இடைதேர்தல் நடைபெற்றது. அதே போன்று மேற்கு வங்கத்தில் உள்ள நோயபரா சட்டமன்ற தொகுதிக்கும், உலுபெரியா நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த இடைதேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராஜஸ்தானின் மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 12,976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அது போன்று அஜ்மீர் மற்றும் ஆழ்வார் நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
அதைப்போல மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள Noapara சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 63,018 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அது போன்று Uluberia நாடாளுமன்ற தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதையடுத்து, இடைத்தேர்தலில் ஆளும் பாஜக அரசு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.