வரலாறு படித்து சமூக சேவை செய்யும் மனுதாரருக்கு வாக்கி டாக்கி குறித்த தொழில்நுட்பம் தெரியாது என்பதால், வாக்கி டாக்கி முறைகேடு புகார் வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் 2017-18 ஆம் ஆண்டில் தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட 47 கோடி தொகைக்கு மாறாக, 83 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், வாக்கி-டாக்கிகளை வழங்கிய தனியார் நிறுவனத்திற்கு தகவல் தொடர்பு கருவிகளை இறக்குமதி செய்வதற்கான உரிமம் கூட இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு, வாக்கி டாக்கியின் தொழில்நுட்பங்களை அறியாத மனுதாரர் வாய்மொழி தகவல்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைத்துள்ளதால் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.