ஜோஹனஸ்பர்க் நகருக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவின் 2வது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமாக கேப்டவுன் விளங்குகிறது. இது மக்கள் தொகையில் ஆப்பிரிக்காவின் 10வது பெரிய நகரமாகவும் விளங்குகிறது.
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள இந்த நகரத்தில் 4.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சியை கேப்டவுன் நகரம் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலைக்கு சென்றதோடு, அந்நகரத்திற்கு தண்ணீர் அளிக்கும் அணைகளில் நீர்மட்டம் முற்றிலும் இல்லாமல் போனது.
தண்ணீர் இல்லா உலகின் முதல் நகரமாக கேப்டவுன் விரைவில் மாற இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லா நகரம் என்றால் ஆண்டுக்கணக்கில் என நினைத்துவிட வேண்டாம். வரும் ஏப்ரல் மாதத்திலேயே இந்த நகரம் தண்ணீர் இல்லா தேசமாக மாறப்போகிறது.
தண்ணீரை மிகவும் சிக்கனமுடன் செலவழிக்க வேண்டும் என நகர நிர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுத்துள்ளது. பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிப்பவர்களுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது என்றால் எந்த அளவிற்கு அங்கு தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது என்பதை நாம் யூகித்துக்கொள்ளலாம்.
முதலில் ஏப்ரல் 21ஆம் தேதி தண்ணீர் இல்லாமல் போகும் என அந்நகர நிர்வாகம் அறிவித்திருந்தது, பின்னர் இது ஏப்ரல் 12 என்றும், மே 11 என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டது.
பல தன்னார்வ அமைப்புகள் இந்நகர மக்களுக்காக தண்ணீரை நன்கொடையாக அளித்து வருகின்றன. தண்ணீருக்கு மாற்றாக சில பொருட்களை அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுமெனவும், குளிக்கும் தண்ணீரை பொதுத் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும் என ஒவ்வொரு துளி நீரையும் சிக்கனத்தின் விளிம்பில் பயன்படுத்த வேண்டுமென நகர நிர்வாகம் பொதுமக்களை வலியுறுத்தியது.
தற்போது நீர் இருப்பை கணக்கிட்டு இந்நகரம் ஜூன் 4, 2018 அன்று தண்ணீர் இல்லா உலகின் முதல் நகரமாக மாறும் என வல்லுநர்களின் கணிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த தேதியில் இது நடக்கும் என்று உறுதியாக கூறமுடியாவிட்டாலும், கேப்டவும் நகரம் விரைவில் உலகின் முதல் தண்ணீர் இல்லா நகரமாக மாறப்போகிறது என்பது உலக மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
கேப்டவுன் மக்கள் மட்டுமின்றி தண்ணீரினை சிக்கனத்துடன் அனைவருமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.