நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் சுமார் பத்தாயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது. கடந்த வடகிழக்குப் பருவமழையால் பல ஆயிரம் ஏக்கர்கள் தண்ணீரில் மூழ்கின. மீண்டும் இரண்டாவது முறையாக இருக்கும் நீரைகொண்டு விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்தனர். தற்போது அறுவடைப் பணிகள் துவங்கி உள்ளன.
வேதாரண்யம்தாலுக்காவில்,ஆதனூர்,கருப்பம்புலம்,ஆயக்காரன்புலம்,மருதூர்,தென்டார்,கரியாப்பட்டினம்,பிராந்தியங்கரை,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைத் துவங்கி உள்ளது.
இயந்திரம் மூலம் அறுவடையை மேற்கொள்ளும் விவசாயிகள் ஏக்கருக்கு 20 முதல் 25 மூட்டைகள் வரை அறுவடை செய்கின்றனர். இந்த நெல்லை வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள சுமார் 25க்கும் மேற்பட்டநேரடி நெல் கொள்முதல் நியைங்களில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். அப்படிகொண்டு வரும் நெல்லை ஈரப்பதம் எனக் கூறிவாங்க மறுக்கின்றனர். பின்பு காயவைத்து கொண்டுவரும் நெல்லை;கொள்முதல் நிலையத்தில் தூற்றிய பிறகே நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் இரண்டுஅல்லது மூன்றுநாள் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் நிலையத்தில் நெல்லை தேக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்து பின்பு விவசாயிகளுக்கு வரவேண்டிய பணத்தை வங்கிக் கணக்கில் வரவுவைப்பதாக கூறிவிடுகின்றனர். ஆனால், நெல் விற்றப் பணம் விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஏறுவதற்கு குறைந்தபட்சம் பத்துநாட்கள் ஆகிறது.
இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகள் நெல் அறுவடை செய்தும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் எந்தவித கட்டுப்பாடுமின்றி உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து மறுநாளே விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் ஏற்றப்படுகிறது.
ஆகையால், திருவாரூர் மாவட்டத்தைப் போல நாகை மாவட்டத்திலும் எவ்வித கட்டுப்பாடுமின்றி விவசாயிகள் கொண்டும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை அவர்களது வங்கிக்கணக்கில் உடன் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.