வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்! February 2, 2018

Image

ஜல்லிக்கட்டு தொடர்பாக பீட்டா தொடர்ந்த வழக்கை 5 கேள்விகளுடன் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.

இதனை எதிர்த்து விலங்குகள் நல வாரியமான பீட்டா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு துணைபோய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், மாடுகள் துன்புறுத்தப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இந்திய அரசியல் சாசன பிரிவு 29 (1)-ன் அடிப்படையில் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் அவசர சட்டம் இயற்றப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில், இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்படுவதாக குறிப்பிட்டு, 5 கேள்விகளையும் முன்வைத்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டு என்பது தமிழக மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்ததா? ஜல்லிக்கட்டு விவகாரத்தில், அரசியல் சாசன பிரிவு 29 (1) பிரிவின் கீழ் அவசர சட்டம் இயற்ற முடியுமா  உட்பட 5 கேள்விகளை அரசியல் சாசன அமர்வுக்கு, உச்சநீதிமன்றம் முன் வைத்துள்ளது.