வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

அருண்ஜெட்லி சிறந்த பொருளாதார நிபுணர் இல்லை: குஷ்பு February 2, 2018

Image

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சிறந்த பொருளாதார நிபுணர் இல்லை எனவும், ஒவ்வொரு பட்ஜெட்டிலும் காங்கிரசின் திட்டங்களையே காப்பி அடிப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கென திட்டங்கள் எதுவும் இல்லை என தெரிவித்தார். பாஜக ஆட்சியிலும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என கூறிய அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இது என குறிப்பிட்டார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமது பதவியை காப்பாற்றி கொள்வதற்காகவே மத்திய அரசின் பட்ஜெட்டை வரவேற்பதாக குற்றம்சாட்டிய குஷ்பு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கூற்றுப்படி மத்திய அரசின் பட்ஜெட்டால் எவ்விதபயனும் ஏற்படப்போவது இல்லை என தெரிவித்தார். 

லஞ்சம் இல்லாத ஆட்சி என்றால் ராஜஸ்தான், மேற்குவங்கம் தேர்தலில் பாஜக தோற்றது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், ஊழலில் ஈடுபடுவோருக்கு பதவி அளித்து குற்றத்தை பாஜக மறைத்துவிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.