
ஊழலுக்கு எதிராக தாம் பேச ஆரம்பித்த போதே அரசியலுக்கு வந்துவிட்டதாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் முயற்சியில் நியூஸ் 7 தமிழ் ஈடுபட்டது.
இதன் ஒருபகுதியாக, 2,683 மாணவர்கள் பங்கேற்று ஐந்தாயிரத்து 366 நாட்டு கத்திரி விதைகள் மற்றும் நாற்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைத்தனர். இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா, ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இயக்குனர் அமீர், நடிகர் சிவகார்த்திகேயன், ஆரி, விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நியூஸ் 7 தமிழுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய சகாயம், விவசாயத்தை நம்பியவர்கள் வீழ்ந்து விடும் நிலையில் இருப்பதாகவும், வணிகம் செய்பவர்கள், சூதும் சூழ்ச்சியும் கொண்டவர்கள் தான் நாட்டை ஆள்வதாகவும் தெரிவித்தார். அரசியலில் ஊழல் ஆழமாக வேரூன்றி உள்ளதாக குறிப்பிட்ட சகாயம், ஊழலுக்கு எதிராக எப்போது பேச ஆரம்பித்தேனோ, அப்போதே தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமீர், திரைப்பட வாய்ப்புகள் தமக்கு இல்லாமல் போனால் அரசியலுக்கு வராமல் விவசாயம் பார்க்க சென்று விடுவேன் என்று கூறினார். மேலும் நல்லவர்கள் ஆட்சிக்கு வராவிட்டால் அதை துஷ்ட சக்திகள் கைப்பற்றும் என்றும் குறிப்பிட்டார்.