ஞாயிறு, 2 மே, 2021

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் : 3 டாக்டர்கள் உட்பட 11 பேர் கைது

 கொரோனா தொற்றுக்கு ‘ரெம்டெசிவிர்’ என்ற மருந்து பயனளிப்பதாகக் கூறி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை, மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். இதனால் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் இந்த மருந்தை சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. ஒரு ரெம்டெசிவிர் குப்பிக்கு ரூ.14000 கொடுத்து வாங்கியதாக பலர் தெரிவித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இந்த மருந்துகள் பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் பணிபுரிந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்தும், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியின் சிறப்பு கவுண்டரிலிருந்து வாங்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சென்னை தாம்பரம் அருகே கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்ற புகாரில் முகமது என்ற மருத்துவர் உட்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ ஊழியராக பணிபுரிந்து வரும் விக்னேஷ் என்பவர் மருத்துவமனையில் இருந்து முறைகேடாக ரெம்டெசிவர் மருந்தை எடுத்து இம்ரானிடம் விற்றுள்ளார். அதை ஒரு குப்பி ரூ.20,000 என்ற விலைக்கு முகமது விற்பனை செய்து வந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பள்ளிக்கரணையை சேர்ந்த மற்றொரு மருத்துவர் தீபனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 6 குப்பிகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரெம்டெசிவர் மருந்தை ஒரு குப்பி ரூ.12,500 என்ற விலையில் விற்றதாக பல்லாவரத்தைச் சேர்ந்த மருந்து விற்பனையாளரான ஜோசப் கின்ஸ்லீ என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு புகாரின் பேரில், காவல்துறையினர் நடத்திய சோதனையில் மிண்ட் பகுதியில் இயங்கி வரும் ஷாராவி மருத்துவமனையில் மருந்தக உதவியாளராக பணியாற்றி வரும் கார்த்திக்கேயன் என்பவர் போலியான ஆவணங்களை தயார் செய்து கீழ்ப்பாக்கம் சிறப்பு விற்பனை மையத்தில் சமர்ப்பித்து ரெம்டெசிவர் மருந்தை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவருக்கு உதவியாக இருந்த ஜானோ என்பவர் தலைமறைவாக உள்ளார்.

இதேபோல பிசியோதெரபிஸ்ட் சம்பாசிவம் மற்றும் செவிலியர் ராமன் ஆகியோர் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/three-doctors-health-workers-arrested-for-illegal-sale-of-remdesivir-in-chennai-298298/