மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஒவ்வாரு அரசியல் கட்சியும், தங்களது பெயர், தலைமை அலுவலகம், நிர்வாகிகள், முகவரி, பான் எண் ஆகியவற்றில் மாற்றம் செய்தால் அதை தேர்தல் ஆணையத்துக்கு தாமதமின்றி தெரிவிக்க வேண்டும். சில அரசியல் கட்சிகள் தங்களது பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு, செலயற்றதாக உள்ளன. இந்த கட்சிகள் செயல்படுகிறதா என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று சரிபார்த்ததில், 86 அரசியல் கட்சிகள் தங்களது முகவரியில் இல்லை. தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பிய கடிதத்துக்கு பதில் இல்லை. இதனால் இந்த கட்சிகளை தேர்தல் ஆணையம் தனது பட்டியலில் இருந்து நீக்குகிறது.
மேலும், பிகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 253 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாமலும், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கடிதங்களுக்கு பதில் அளிக்காமலும் இருந்துள்ளன. ஆகையால் இந்த கட்சிகளை முடக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கட்சிகளின் சின்னங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகள் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 339 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மே 25-ஆம் தேதி முதல், விதிமுறைகளை பின்பற்றாத 537 கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
14 தமிழக கட்சிகள்
தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் தேசியக் கட்சி, சமூக சமத்துவ படை, சக்தி பாரத தேசம், தேசிய நலக் கட்சி, நமது திராவிட இயக்கம், மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், காமராஜர் ஆதித்தனார் கழகம், இந்துஸ்தான் தேசிய கட்சி ஆகிய 14 கட்சிகள் செயல்படாதவைகளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/election-commission-delists-86-parties-declares-253-inactive-510022/