தாமிரபரணி கரையோர பகுதிகளில் கள ஆய்வுப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி நதி கரையோர பகுதிகளில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளது. இந்த அனைத்து பகுதிகளிலும் தற்போது தொல்லியல் வரலாறுகளில் முக்கிய பகுதிகளாக உள்ளது. குறிப்பாக ஆதிச்சநல்லூரில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் அகழாய்வு பணிகள் நடந்தது.
இந்நிலையில் ஆங்கிலேயே ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா என்பவர் ஆதிச்சநல்லூர், கொற்கை உள்பட 38 இடங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் இடங்கள் உள்ளதாகவும், அதில் 21 இடங்கள் இறந்தவர்களை புதைக்க பயன்படுத்திய பரம்பு பகுதிகளாகவும், 17 இடங்கள் மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் வாழ்விடம் பகுதிகளாக இருந்தாகவும் அவரது அறிக்கைகளிலும் குறிப்புகளிலும் கூறியுள்ளார்.
ஆதிச்சநல்லூரை பொறுத்தவரை இதுவரை 5க்கும் மேற்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் நடந்துள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் மூன்று முறையும் தமிழக தொல்லியல் துறை சார்பில் 2 முறையும் நடந்தது. பலமுறை வெளிநாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இந்த பகுதியில் ஆய்வுப் பணிகள் செய்துள்ளனர். கடந்த 2020 ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து அதற்கான முதற்கட்ட பணியாக அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிகப்பட்டு வருகிறது. குறிப்பாக தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், இரும்பால் ஆன வாள், அம்பு, ஈட்டி போன்ற பொருட்களும், நெல் உமிகள், சங்க கால வாழ்விடம் பகுதிகள், 80க்கும் மேற்பட்ட மூன்று கால கட்டத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் கடந்த மூன்று வருடமாக சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. மேலும் அதன் அருகே உள்ள பாண்டியன் தலைநகராகவும், மிகப்பெரிய துறைமுகம் பட்டிணமாகவும் விளங்கிய கொற்கையில் கடந்த வருடம் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது கடல்சார் ஆய்வுப்பணிகளும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தான் கடந்த வருடம் தமிழக அரசு தொல்லியல் ஆய்வாளர் தங்கதுரை தலைமையில் ஒரு குழுவினரை கொண்டு பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை தாமிரபரணி நதி பாயும் பகுதியின் இருபுறமும் உள்ள கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு எந்தெந்த கிராமங்களில் தொல்லியல் அடையாளங்கள் உள்ளது என்பதை அறிக்கையாக சமர்பிக்கும்படி தெரிவித்திருந்தது. அதன் பணிகள் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடந்து வரும் நிலையில் தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது கிராமங்களில் உள்ள கோவில்களில் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் பாபநாசம் தொடங்கி தாமிபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை 100க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் அதிக அளவில் வாழ்விடப்பகுதிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தாமிரபரணிக்கரை நாகரீகம் மிகவும் தொன்மையான நாகரீகம் என்பதை சிவகளை அகழாய்வின் அறிக்கைகள் வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது. தற்போது அதனை தொடர்ந்து இந்த கள ஆய்வும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த கள ஆய்வுப்பணிகள் நிறைவு பெற்றவுடன் இதனை தமிழக அரசு கள ஆய்வு அறிக்கையாக விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.