15 09 2022
காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுக்கு ஊட்டிவிட்டதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 லட்சத்து 14,095 மாணவா்களுக்கு ரூபாய் 33 கோடி 56 இலட்சத்தில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா ஏதேனும் ஒன்றும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை கிச்சடியில் ஏதேனும் ஒன்றும், புதன்கிழமை ரவை அல்லது வெண் பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரியுடன் காய்கறி சாம்பாா் தினமும் வழங்கப்படவுள்ளது.
இன்று மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 1246 தொடக்கபள்ளிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 26 பள்ளிகளை சேர்ந்த 4,136 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மதுரை கீழத் தோப்பு பகுதியில் உள்ள ஆதி மூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கும் ஊட்டிவிட்டார்.
முன்னதாக, மதுரை நெல் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 3 சமையல் கூடங்கள் வாயிலாக உணவுகள் கொண்டு செல்லப்படவுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..
திங்கள்கிழமை :
ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
அரிசு உப்புமா + காய்கறி சாம்பார்
கோதுமைரவா உப்புமா + காய்கறி சாம்பார்
செவ்வாய்கிழமை :
ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவாகாய்கறி கிச்சடி
புதன்கிழமை :
ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்
வெண்பொங்கல் + காய்கறி சாம்பார்
வியாழக்கிழமை :
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
அரிசி+ உப்புமா + காய்கறி சாம்பார்
ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
வெள்ளிக்கிழமை :
ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவா காய்கறி கிச்சடி
கூடுதலாக ரவா கேசரி, சேமியா கேசரி
மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
source https://news7tamil.live/breakfast-program-the-chief-minister-distributed-food-and-fed-the-students.html