1 8 23
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக புதன்கிழமை மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலுல்கள் குறித்து விவாதம் நடத்த இயலாமல் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 8-வது நாளாக நேற்றும் முடங்கியது.
இதற்கிடையே மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 10 நாள்களில் பட்டியலிடப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
இந்த நிலையில் டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், குடிமைப்பணி அதிகாரிகளை மத்திய அரசே நியமிக்க வழிவகுக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
இச்சட்டத்திற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிலையில், டெல்லி அவசர சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இம்மசோதாவிற்கு எதிராக INDIA கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://news7tamil.live/an-emergency-bill-to-reduce-the-power-of-the-delhi-government-filed-in-the-lok-sabha-today.html