செவ்வாய், 15 மார்ச், 2016

வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா..? எச்சரிக்கை...!! [


16 வயது.... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள். வெளுத்ததெல்லாம் பால், மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள். இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
ஓரக்கண்ணால் பார்த்து...தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து... காதல் வளர்த்த காலம் போயே போச்சு.
நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை..
உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு...3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை.
இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை. செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.
காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ஓட்டம்....
2 மாதங்களில் மட்டும் சென்னையில் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வட சென்னை மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் "காதல்" பட காட்சிதான்.
அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்த மாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு.... என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து வளர்த்து.... வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது.
புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.
இது குறித்து வட சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான்.
14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.டி.வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர்.
எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது.
பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு!
வட சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு வாரம் 5 புகார்களும், புளியந்தோப்புக்கு 4 புகார்களும், எம்.கே.பி.நகர் போலீசுக்கு 3 புகார்களும், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் முறையே 4 புகார்களும், வருகிறது. குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.
இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது.
திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.
வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள்.
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்...