தேசத் துரோகம் என்ற பதத்திற்கான உண்மையான பொருள் என்ன என்பதை கண்டறிய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். தன் சொந்த நாட்டிற்கு எதிராக கோஷமிடுபவர்கள், நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மட்டும்தான் தேசத் துரோகிகளா…? தேசத் துரோகம் என்ற பதத்திற்கான உண்மையான பொருள் என்ன…?
கன்ஹையா குமாரின் உரையிலிருந்து துவங்குகிறேன்…
“ராணுவ வீரர்களுக்காகவும், நமக்காகவும் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த நாட்டிற்குள் தற்கொலை செய்து கொள்கிறார்களே…அந்த ராணுவ வீரர்களின் தந்தைகளான அந்த விவசாயிகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என் அப்பன்தான் சேற்றில் உழைக்கிறான், என் சகோதரன்தான் ராணுவத்தில் இணைந்து எல்லையிலும் உழைக்கிறான், உயிர் துறக்கிறான்… எங்கள் உறவுகள்தான் நாட்டிற்குள்ளும், எல்லையிலும் இறக்கிறார்கள்…” இது கன்ஹையா உரையின் ஒரு பகுதி.
நம் சகோதரர்கள் வயலிலும், எல்லையிலும் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக பேசுபவர்கள் தேசத் துரோகிகள் ஆவதும், அவர்களின் சாவிற்கு காரணமானவர்கள் கதாநாயகர்கள் ஆவதும் விசித்தரமானது.
கடந்த பத்து ஆண்டுகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். 2014 -ம் ஆண்டு மட்டும் 12,360 விவசாயிகள் தற்கொலை, நம் தேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 23 சதவீத விவசாயிகள் வங்கியிடம், தனியாரிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்தமுடியாமல் போனதால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரம், ‘எனக்கு இருக்கும் ஒரே கவலை, எரிபொருள் விலை இவ்வளவு குறைந்துள்ள நேரத்தில், கிங்ஃபிஷர் முடங்கி கிடப்பதுதான்…’ என்கிறார் மல்லையா. அவருக்கு ஆயிரம் கோடிகளில் வாங்கிய கடனைக் செலுத்த வேண்டும் என்ற எந்த கவலையும் இல்லை, அதற்காக அவர் வருத்தப்படவும் இல்லை. அவர் எண்ணமெல்லாம், தன் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றி மீது மட்டும்தான். ஆனால், இவரிடம் மென்மையாக நடந்து கொள்ளும் வங்கிகள்தான், ஏழை விவசாயிகளிடம் கடுமையாக நடந்து கொள்கின்றன.
இதற்கு காரணமாக இருப்பவர்கள் கதாநாயகர்களாக கொண்டாடப்படும் போது, இதை சுட்டிக் காட்டுபவர்கள் தேசத் துரோகிகளாக ஆகிவிடுகிறார்கள்.
இவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்போவது யார்…?
கடந்த 2013 -2015 காலக்கட்டங்களில் மட்டும், 29 தேசியமயமக்கப்பட்ட வங்கிகள் ரூ.1.14 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில், வங்கிகளின் வாராக்கடன் அளவு 60 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், கடனை செலுத்த தவறியவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் இல்லை. நடவடிக்கை இல்லையென்றால் கூட பரவாயில்லை, ‘வங்கிகளை திருப்பி செலுத்தாத நிறுவனங்களை முடக்கிவிடக் கூடாது, அவர்களுக்கு இன்னும் கடன் தந்து ஊக்கப்படுத்த வேண்டும்’ என்கிறார்கள் சில மெத்தப்படித்த பொருளாதார பத்தி எழுத்தாளர்கள்.
நியாயம் தானே… நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், பெரும் பங்கு வகிப்பவர்கள் அவர்கள். அவர்களை முடக்குவது எப்படி நியாயமாகும், அவர்களுக்கு அதிக கடன் தந்து ஊக்குவிக்க வேண்டும் என்று உங்களது இடது பக்க மூளை தர்க்கம் செய்யும். ஆனால், விவசாயிகளை, சிறு நிறுவனங்களை இது போல் என்றுமே இத்தேசம் ஊக்குவித்தது இல்லை. ‘விவசாயிகள் கடனைதான் தள்ளுபடி செய்கிறார்களே..’ என்பது உங்கள் வாதமாக இருந்தால், நீங்கள் சிறு விவசாயியை சந்தித்து உரையாடுங்கள்… இந்த வங்கிகள் அவர்களை எந்தளவிற்கு அவமானப்படுத்துகிறது என்பது புரியும்.
இவர்கள் கடன் தள்ளுபடி ஆகிறதென்றால், வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாக திவாலாகிறது என்று அர்த்தம். அந்த வங்கிகளை காக்க, மத்திய அரசு வங்கிகளுக்கு பணம் தந்து காக்கிறதென்றால், அவர்கள் தருவது யார் பணம்….? தன் குடிகளின் வரிப்பணம்.
தேசத்தின் பொருளாதாரத்தை சீரழிப்பவர்கள், தேசத் துரோகிகள் இல்லையா…? இவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிய போவது யார்…?
இந்தியாவை மீண்டும் காலனியாதிக்கத்திற்கு கீழ் கொண்டு செல்பவர்கள் தேசத் துரோகிகள் இல்லையா…?
இந்திய அரசு 2010-ம் ஆண்டு, தேசிய சோலார் மிஷன் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன் முக்கிய நோக்கம் தூய எரிசக்தி (சோலார்) துறையில் உள்ளூர் தொழிற்நுட்பத்தை மேம்படுத்துவது. அதாவது, தூய எரிசக்தி உற்பத்தியை பரவலாக்கி, மக்களை இதில் ஈடுபட வைத்து, மக்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குவது. தூய எரிசக்தி உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு, அதற்கான உபகரணம் வாங்க, மானியம், கடன் வழங்குவது என்பதுதான் திட்டம். அதுவும் குறிப்பாக உள்ளூரில் தயாரித்த உபகரணங்களைதான் வாங்க வேண்டும், அப்போதுதான் கடன், மானியங்கள் அனைத்தும் கிடைக்கும். இதன் மூலமாக உள்ளூர் தொழிற்நுட்பம் மற்றும் உற்பத்தியை வளர்க்க முடியும், தூய எரிசக்தி உற்பத்தியையும் பெருக்க முடியும் என்று அரசு திட்டமிடுகிறது. திட்டம் அருமையாக இருக்கிறது அல்லவா…?
ஆனால், இந்த திட்டத்தை எதிர்த்து 2013 ல் அமெரிக்க அரசாங்கம், உலக வர்த்தக அமைப்பிடம் முறையிடுகிறது. அமெரிக்காவின் வாதம், “காட் (GATT) வணிக ஒப்பந்தத்திற்கு எதிரானது இந்திய அரசின் இந்த அறிவிப்பு. அதாவது, உள்நாட்டில் மட்டும் உபகரணங்கள் வாங்க வேண்டும் என்று சொல்லக்கூடாது, GATT ஓப்பந்தத்தில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும், இந்தியாவில் சூரிய மின் உற்பத்தியில் ஈடுபடுபவர்களை உபகரணங்கள் வாங்க அனுமதிக்க வேண்டும்” என்பது.
அதாவது, நமது உள்நாட்டு சட்டத்திட்டங்கள் செல்லத்தக்கதல்ல என்கிறது இன்னொரு அரசு, நமது திட்டத்தை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பிடமும் முறையிடுகிறது. மறைமுகமாக காலனியாதிக்கதிற்கு அழைத்து செல்கிறது இந்த ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தத்தில் மட்டும்மல்ல, கல்வியில், சுகாதாரத்தில் நம் நாட்டின் சுயச்சார்பை கேள்விக்குறியாக்கும் இன்னொரு ஒப்பந்த (GATS) பேச்சுவார்த்தையிலும், இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
நமது சட்டத்திட்டங்களை கேள்வி குறியாக்கும் இது போன்ற ஒப்பந்ததங்களில் கையெழுத்திட்ட அரசியல்வாதிகள் தேசத் துரோகிகள் இல்லையா…?
உண்மையான தேசப்பற்று என்பது, நாட்டின் வளங்களை காப்பதும், நாட்டின் சுயச்சார்பை காப்பதும் தான், வெற்று கோஷங்கள் என்றும் தேசப்பற்றாகாது.