சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கோபால், கடந்த 2006ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். இதில் கட்டப்பஞ்சாயத்து மூலம் தன்னிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 40 ஆயிரம் ரூபாய் பணத்தை, நல்ல தண்ணீர் ஓடை குப்ப மீனவர் சபையிடம் இருந்து திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதேபோல் கட்டப் பஞ்சாயத்து மூலம் ஒதுக்கி வைக்கப்பட்ட மகனுக்கு, தண்ணீர் கொடுத்த தாய்க்கு அபராதம் விதித்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதிகள் கவுல் மற்றும் சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது, இதுதொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், 4 மாத கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்ட வரைவுக்கான திட்டத்தை உருவாக்கி, வரும் ஜூன் 23ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பொது மற்றும் மறுவாழ்வுத் துறை முதன்மை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.