வெள்ளி, 25 மார்ச், 2016

தினை

உடலுக்கு பலத்தை தரும் தினை

hதினை தமிழகத்தில் தொன்று தொட்டே இருந்து வரும் சிறு தானியமாகும். இதை ஆங்கிலத்தில் பாக்ஸ்டெயில் மில்லட் என்று அழைப்பார்கள். சிடேரியா இட்டாலிகா என்பது இதன் தாவர பெயராகும். தினை என்று சொல்கின்ற போதே தமிழ் நிலத்தில் உள்ள ஐந்து தினைகளை குறிப்பதை நாம் நினைவு கூரலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் தினை ஒரு அருமையான உணவு பொருளாக இருந்து வருகிறது. 

அரிசி,கோதுமை ஆகியவற்றை விட அதிகமான சத்துகளை உள்ளடக்கிய அருமையான தானியமாக தினை விளங்குகிறது. தினையை ஆயிரம் மைல்கள் தூரம் சோர்வின்றி பறக்கும் பறவைகள் விரும்பி சாப்பிடுகின்றன. எனவே தினையை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது உள் உறுப்புகள் பலம் பெறுகின்றன. நோயில்லாத வாழ்க்கைக்கு தினை மிகவும் உதவுகிறது. தினையை மேல் பூச்சு மருந்தாகவும், உள்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தலாம். பல்வேறு நோய்களை போக்கக் கூடியதாக இந்த தினை விளங்குகிறது. 

இந்த தினையை பயன்படுத்தி நமது உடலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சில எளிய வகை உணவு பொருட்களை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். தினையை பயன்படுத்தி பாயாசம் ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் தினை, ஏலக்காய் பொடி, சர்க்கரை அல்லது வெல்லம், பால், நெய், முந்திரி பருப்பு. தினையை சமைப்பதற்கு முன்பாக சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் அதை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தேவையான அளவு வெல்லத்துடன் நீரை சேர்த்து பாகாக தயார் செய்து கொள்ள வேண்டும். வெல்லத்துடன் சில நேரம் மண் இருப்பது போன்று தெரிந்தால், தண்ணீரில் நன்றாக கரைத்து பின்னர் அதை வடி கட்டி எடுத்து பாகாக தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஏலக்காய் பொடி, தினை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்த தினை என்பதால் ஒரு கொதிக்கு பிறகு, இதனுடன் காய்ச்சிய பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் நிறுத்திக் கொள்ளலாம். 

பின்னர் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்க்க மணமிகுந்த தினை பாயாசம் ரெடியாகி விடும். இது குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும், அதே நேரம் உடலுக்கு ஊட்டம் தருவதாகவும் அமைகிறது. இலக்கியங்களிலே வேட்டுவர்கள் தேனையும் தினை மாவையும் கலந்து சாப்பிட்டு விட்டு காடு மேடுகளில் நாள் முழுவதும் வேட்டையாடி திரிந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தினை மிகுந்த பலத்தை கொடுப்பதாக அமைகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியதாக தினை விளங்குகிறது. சிறுநீரை வெளித்தள்ளக் கூடியதாக, பசியை தூண்டக் கூடியதாக, வயிற்று கோளாறுகளை சரி செய்யக் கூடியதாக அமைகிறது.

அதே போல் தினையை பயன்படுத்தி குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய லட்டு எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் தினை மாவு, ஏலக்காய் பொடி, சர்க்கரை, வறுத்து அரைத்து எடுத்து வைத்துள்ள தினை மாவுடன் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சிறிது ஏலக்காய் பொடியை சேர்க்க வேண்டும். 

பின்னர் நெய்யை சூடாக உருக்கி தேவையான பதத்தில் இந்த கலவையுடன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக லட்டாக பிடித்துக் கொள்ளலாம். உருகிய நெய்யின் சூட்டிலேயே சர்க்கரை கரைந்து மாவுடன் இணைந்து விடும்.சூடு இருக்கும்போதே லட்டாக பிடித்தால் நன்றாக உருண்டையாக வரும். தேவைப்பட்டால் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றை மிக்சியில் அரைத்து இதனுடன் சேர்ப்பதால் சுவையும், உடலுக்கு ஊட்டமும் கிடைக்கக் கூடிய பண்டமாக இருக்கும். இது குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கும்.