ஞாயிறு, 20 மார்ச், 2016

கொசுவிரட்டி – ரூம் ஸ்பிரே அலர்ஜி!


ld4109
தேவை அதிக கவனம்

கொசுவர்த்தியைத் தொடர்ந்து  ரூம் ஸ்பிரே, ரூம் ஃப்ரெஷ்னர் போன்ற வாசனைத் திரவியங்களும் வீடுகளில் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டன. கொசுத் தொல்லையிலிருந்து தப்பிக்க, வாசனைக்காக என எதற்காகப் பயன்படுத்தினாலும், இவற்றிலிருந்து வெளிவரும் நறுமணங்கள் பலருக்கும் ஏற்றுக் கொள்வதில்லை. உடனடியாகத் தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகளையும் உருவாக்கி விடுகின்றன.  கொசுவர்த்திகளும் வாசனை திரவியங்களும் தவிர்க்க முடியாத நிலைமையில் நாம் என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறார் நரம்பியல் சிகிச்சை மருத்துவரான விஜய். 

‘‘கொசுவர்த்திகள், வாசனை திரவியங்களால் ஒற்றைத்தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், அலர்ஜி போன்ற தும்மல் என 3 முக்கியமான பிரச்னைகள் ஏற்படுகிறது. இவை முழுக்க முழுக்க வேதியியல் பொருட்களால் உருவாகின்றன என்பதும், அந்த வேதிப்பொருட்களின் வீரியத்தை நம்மால்  தாங்கிக் கொள்ள முடிவதில்லை என்பதும்தான் காரணம். 

கொசுவர்த்திச்சுருள், ஸ்பிரேக்களால் ஏற்படும் பாதிப்பை கிட்டத்தட்ட சிகரெட் பிடிப்பதற்கு இணையாகச் சொல்லலாம். லிக்யூட் வடிவத்தில் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் கொசு விரட்டிகள் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். சிகரெட்டில் கார்பன் புகை, கொசுவர்த்தி மற்றும் வாசனை திரவியங்களில் வேறு வேதிப்பொருட்கள் என்பது மட்டும்தான் வித்தியாசம். 

இத்தனை சிக்கல்கள் இருப்பதால் அளவோடு, கவனமாகவே இவற்றைப் பயன்படுத்த வேண்டும். கொசுவர்த்திச் சுருளைப் படுக்கைக்குப் பக்கத்தில் வைத்துத் தூங்கக் கூடாது. முடிந்த வரை சற்று தொலைவான தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கொசுவர்த்தியைத் தவிர்க்க முடிகிற பட்சத்தில், கொசு விரட்டப் பயன்படும் Mosquito bat பயன்படுத்துவதும் நல்ல மாற்று வழிதான். 

எலெக்ட்ரானிக் கொசு விரட்டியை 10 மணிக்கு ஆன் செய்தால், 11 மணிக்கு ஆஃப் செய்துவிட்டு தூங்குவதே நல்லது. இரவு முழுவதும் ஆன் மோடிலேயே இருந்தால், அதிலிருந்து வெளிவரும் காற்றைத்தான் சுவாசிக்க வேண்டியிருக்கும். கதவுகள், ஜன்னல் எல்லாம் சார்த்தப்பட்டிருக்கும் அறையில், எலெக்ட்ரானிக் கொசுவிரட்டியின் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். அதனால் தூங்கச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்போ, எலெக்ட்ரானிக் கொசு விரட்டியை அணைத்த ஒரு மணி நேரம் கழித்தோ தூங்கச் செல்லலாம். இல்லாவிட்டால் பிரச்னைகள் உருவாகும். தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, வீசிங் போன்ற தொல்லைகள் இருக்கிறவர்களுக்கு பிரச்னைகள் மேலும் அதிகமாகலாம். 

இதை சமாளிக்க, முடிந்தவரை கொசுவர்த்தியின் தேவையைக் குறைக்கும் அளவுக்கு மாற்று வழிகளையும் கையாள வேண்டும். 
வீட்டில் கொசு அதிகமாக வருகிற நேரம் மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான அந்த நேரத்தில் தூங்கும் அறையின் ஜன்னல், கதவுகளை சாத்தி வைத்துக்கொண்டு அதன் பிறகு திறந்துகொள்வது ஒரு வழி. கொசு வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், வீட்டுக்கு அருகில் தண்ணீர் எதுவும் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் கப்புகளில் தேங்கி இருந்தால்கூட அதில் கொசு வளரலாம். 

அதனால் கொசு உருவாகும் இடத்திலேயே இவற்றைத் தடுக்க முயற்சிக்க வேண்டும். ஹேங்கரிலோ, கொடியிலோ உடைகள் அதிகம் இருந்தால் அவற்றில் கொசு ஒளிந்து கொள்ளும். அதனால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதும் கொசு வராமல் தடுக்கும். வாய்ப்பு இருந்தால் நொச்சி செடி வளர்க்கலாம். ஏசி அறையில் கொசு அதிகம் இருக்காது என்பதால், ஏசி பயன்படுத்துகிறவர்கள் கொசுவர்த்தியைத் தவிர்க்கலாம்.

பெர்ஃப்யூமை பொறுத்தவரையில் நேரடியாக உடலில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் மைக்ரேன், அலர்ஜி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் சரும நோய்கள், சுவாச நோய்கள், புற்றுநோய் கூட வரலாம். இந்த நறுமணம் வேண்டும் என்று வாசனைகள் அதிகம் கொண்டதாக விரும்பி வாங்குகிறோம். எந்த அளவுக்கு அதிக வாசனை கொண்டதாக ஸ்பிரேக்கள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு வேதிப்பொருட்கள் நிறைந்ததாக இருக்கும். 

அதனால், அதிக வாசனை கொண்டவற்றையும், தரம் குறைந்த பெர்ஃப்யூம்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.ரூம் ஸ்பிரேக்களில் 2 வகைகள் இருக்கின்றன. சில ரூம் ஸ்பிரேக்கள் நாள் முழுவதும் வாசனையோடு இருக்கும். சில ரூம் ஸ்பிரேக்கள், தற்காலிகமாக சில மணி நேரங்களுக்கு மட்டும் வாசனையாக இருக்கும். இவற்றில், நாள் முழுவதும் வாசம் வீசுகிற ரூம் ஸ்பிரேக்கள் அபாயகரமானவை. அதிலிருந்து வெளிவருகிற வேதிப்பொருட்களையே நாள் முழுவதும் நாம் சுவாசித்துக் கொண்டே இருப்போம் என்பதால், ஆபத்து அதிகம். 

கொசுவர்த்திப் பயன்பாட்டைத் தவிர்க்க இயற்கையான வழிகளைக் கையாள வேண்டும் என்று சொன்னதைப் போல, ரூம் ஸ்பிரே பயன் படுத்துவதற்கும் மாற்று வழியாக அறையை முடிந்தவரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ரூம் ஸ்பிரே பயன்படுத்தினால் குறைந்த அளவு வீரியம் கொண்ட, குறைந்த நேரம் மட்டுமே வாசம் தருகிற தரமான ஸ்பிரேக்களையே பயன்படுத்த வேண்டும்.’’