வியாழன், 10 மார்ச், 2016

POWER OF THE NEW MEDIA


---------------------------------------
இந்துஸ்தான் லீவர் பிரம்மாண்டமான கம்பெனி.
ப்ரூ, லிப்டன், கிசான், ரின், க்ளோஸ் அப், ஹமாம், மாடர்ன் பிரட், சர்ப் எக்செல், விம், சன்சில்க், ஃபேர் அன் லவ்லி... இன்னும் இன்னும்.
அதன் தயாரிப்பை பயன்படுத்தாதவர்கள் அநேகமாக இல்லை. ஆண்டுக்கு 30,000 கோடி பிசினஸ்.
விளம்பரத்துக்கு மட்டும் ஐயாயிரம் கோடி. வெகுஜன ஊடகம் எனப்படும் பத்திரிகை, டீவி சேனல்களுக்கு வைர முட்டையிடும் வாத்து.
கொடைக்கானல் தெர்மாமீட்டர் கம்பெனி மேட்டர் வெகுஜனத்துக்கு தெரியாமல் போனது அப்படிதான். டோட்டல் பிளாக் அவுட் இல்லை. ஒரு மாதிரி நாசூக்கான இருட்டடிப்பு.
பின்னணி இது:
இந்துஸ்தான் லீவர் தெர்மாமீட்டர் ஆலை 1983ல் தொடங்கப்பட்டது. பிரதான இடுபொருள் மெர்குரி. பாதரசம். அது விஷம். காற்றில் கலக்கும்போது மக்களுக்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். தலைமுறை தாண்டியும் தொடரும்.
தேவையான மெர்குரியை அமெரிக்காவில் இருந்து வருவித்தது லீவர். தெர்மாமீட்டரில் அடைக்கும் பணியில் சேதாரம் அதிகம்.
பாதரச கழிவையும் கண்ணாடி கழிவையும் வளாகத்தில்
கொட்டி வைத்து, பாம்பாறு வழியாக அவ்வப்போது வெளியேற்றினர். அது வைகையில் சேரும் ஆறு. மீன்கள் வழியாக மனிதர்களை தொட்டது பாதரச நச்சு.
தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் நோய்கள் வந்ததும் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. புகார்கள் குவிந்தன. அரசு விசாரணை நடத்தியது. பாதிப்பு உண்மை என தெரிந்தது. 1300 கிலோ பாதரசத்தை ஆற்றில் விட்டதாக நிர்வாகமே ஒப்புக் கொண்டது. 400 கிலோ மண்ணில் கலந்திருப்பதாகவும் சொன்னது.
மாசு கட்டுப்பாடு வாரிய உத்தரவுப்படி ஆலை 2001ல் மூடப்பட்டது. குவிந்திருந்த பாதரச கழிவு 2003ல் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மோசமான உடல் பாதிப்புகளை சுட்டிக் காட்டி 2006ல் தொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
உள்ளூர் மக்களும் தன்னார்வ அமைப்புகளும் போராடியது வெகுஜன ஊடகத்தில் முழுமையாக பதிவாகவில்லை. ஊடகர் டி என் கோபாலன் இந்த விவகாரத்தில் ஒரு செயல் முனைவராக தனக்கு நேர்ந்த அனுபவத்தை நம்ம அடையாளம் இதழில் ஓரளவு சொல்லியிருந்தார். புத்தகமும் எழுதியதாக நினைவு.
ஆலை மூடலோடு முடிந்தது பிரச்னை என்று லீவர் நினைத்திருக்கலாம். முடிய விடவில்லை சில நல்ல உள்ளங்கள். தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான அட்வகேட் வைகை, சுற்று சூழல் கண்காணிப்பு குழு ஆலோசகர் நித்யானந்த் ஜெயராமன் போன்றவர்கள்.
அவர்களுக்கு வரமாக வாய்த்தார் ரதீந்திரன் பிரசாத். பிரச்னையை ஆழமாக அலசி ஒரு விடியோ படம் தயாரித்தார். லீவரை சாட்டையால் அடிக்கும் வார்த்தைகள் அடங்கிய ராப் பாடல் இடம் பெற்றது. ’கொடைக்கானல் விடாது’ என பொருள்படும் வரிகளை சோபியா அஷ்ரப் என்ற இளம் பாடகி எழுச்சியுடன் பாடியிருந்தார்.
பதினைந்தாயிரம் ரூபாயில் தயாரான 3 நிமிட விடியோவை யூடியூபில் ஏற்றியது ஜட்கா.ஆர்க் என்ற தொண்டு நிறுவனம். சோபியாவின் குரலும் பாடல் வரிகளும் காட்சிகளும் தொழில் உலகை உலுக்கின. போபால் விஷவாயு கசிவால் யூனியன் கார்பைடு எதிர்கொண்ட மக்கள் கோபத்தை இப்போது லீவர் குழுமம் சந்தித்தது. விழி பிதுங்கியது.
சூடு அதிகமானதால் இறங்கி வந்து இழப்பீடு தர ஒப்புக் கொண்டு தொழிலாளர்களுடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது இந்துஸ்தான் லீவர்.
சமூக ஊடகத்தின் வெற்றிப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல்.
போராளிகளுக்கு வாழ்த்துக்கள்.

Related Posts: