பூமியின் தென்கோடியில் தென் துருவத்தை அடக்கியுள்ள ஒரு கண்டம் அண்டார்ட்டிக்கா. ஆசியாவுக்கு அடுத்த படியாக 5.4 மில்லியன் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட, முழுவதுமாக பனி சூழ்ந்த ஐந்தாவது பெரிய கண்டம். பூமியின் மிகக் குளிர்ந்த, உலர்ந்த, அதிகமாக காற்று வீசும் பகுதியும் அண்டார்ட்டிக்காதான்.
அண்டார்ட்டிக்காவை கிழக்கு, மேற்கு என இரு பகுதியாக அங்கு பரந்திருக்கும் பெரிய மலைத் தொடர் ஒன்று பிரிக்கிறது. கிழக்குப் பகுதி சுமார் ஆஸ்திரேலியாவின் அளவு கொண்டது. இங்கு உள்ள பனிப்பாறைகளின் உயரம் சராசரியாக 1.2 மைல்கள் இருக்கும். மேற்கு அண்டார்ட்டிக்கா பெரும்பாலும் தென் அமெரிக்காவின் தென் முனைவரை தொடரக்கூடிய, இது உறைந்து போன பல தீவுகளைக் கொண்டது. பல நேரங்களில் பனித்துகள்களை சுமந்துகொண்டு 200 மைல் வேகம் வரை வீசும் பலத்த குளிர் காற்றுக்கு அண்டார்ட்டிக்கா பிரபலமானது.
அண்டார்ட்டிக்காவில் கொதிக்கும் வெந்நீரை மேலே விட்டெறிந்தால் அது உடனேயே நீராவியாகவும் சிறு பனிக்கட்டிகளாகவும் மாறிவிடும் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். அண்டார்ட்டிக்காவில் பனிக்கட்டிகள் உருகினால் பூமியின் மற்ற பகுதிகளிலுள்ள கடல் நீர் மட்டம் 200 அடி வரைகூட உயருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கோடை காலமாகவும் ஆண்டின் மற்ற மாதங்கள் குளிர் காலமாகவும் இங்கு காணப்படுகின்றன.பூமியின் வடக்குப் பகுதிகளுக்கு நேரெதிரான பருவ நிலை. மரம், செடி, கொடிகள் இங்கு வளர்வதில்லை. பெங்குவின், வேல், சீல் போன்ற கடல் இனங்களை கடலோரப் பகுதிகளில் காணலாம். நிரந்தரமாக இங்கு வசிப்பவர்கள் யாருமில்லை என்றாலும் பல ஆராய்ச்சிகளுக்காக ஆயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை மக்கள் இங்கே எந்நேரத்திலும் தங்கியிருப்பதைக் காணலாம்.
அண்டார்ட்டிக்கா பகுதியில் ராணுவ நடவடிக்கைகள், கனிம வளங்களெடுத்தல், அணு பரிசோதனை செய்தல் போன்ற சுற்றுப்புற சூழ்நிலையை பாதிக்கக் கூடிய எந்த செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என்ற அண்டார்ட்டிக்கா ஒப்பந்தத்தில் 1959 ஆம் ஆண்டு சுமார் 50 நாடுகளுக்கு மேல் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
பதிவு செய்த நாள் : September 01, 2016 - 07:27 AM