வியாழன், 1 செப்டம்பர், 2016

வாந்தியை தடுக்கும் சில எளிய வழிகள்


வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும்.
குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது,அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன் சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று.
வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தும். வாந்தியை நிறுத்துவதற்குப் பல மருந்துகள் உள்ளன. என்றாலும், வாந்திக்கு என்ன காரணம் என்று தெரிந்து, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றால்தான் வாந்தி சரியாகும். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.
# உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் சாப்பிடாதீர்கள்.
# அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாதீர்கள்.
# அஜீரணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
# வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.
# பயண வாந்திக்கோளாறு உள்ளவர்கள் பேருந்துப் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு ‘அவோமின்’ போன்ற வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.