மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக அரியலூர் பகுதியில் கொண்டுவரப்பட்ட சிமென்ட் ஆலைகள் இன்று ஒட்டுமொத்த அரியலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்துப் போட்டிருக்கிறது.
வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி, பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட வசதி, முறையான சாலை வசதி இத்தனையும் தருவோம் என்று தனியார் சிமென்ட் ஆலைகள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி, தங்களது நிலங்களை கேட்ட விலைக்குக் கொடுத்தார்கள் அரியலூர் மாவட்ட மக்கள். வாக்குறுதிகள் அனைத்தையும் பொய்யாக்கியதோடு மட்டுமில்லாமல், இருந்த கொஞ்சநஞ்ச வாழ்வாதாரத்தையும் பறித்து மக்களை சொந்த மண்ணின் அகதிகளாக்கின சிமென்ட் ஆலைகள்.
அரசு சிமென்ட் ஆலையைத் தவிர அரியலூர் மாவட்டத்தில் 8 தனியார் சிமென்ட் ஆலைகள் செயல்படுகின்றன. இதில் ஒன்று பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ளது. மற்றொன்று தற்போது இயங்காமல் உள்ள சிறிய ஆலை. இந்த ஆலைகளுக்குத் தேவையான சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுப்பதற்காக அரியலூர் மாவட்டத்தில் மட்டுமே 150-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் உள்ளன.
இவற்றிலிருந்து மாதத்திற்கு சுமார் 5 லட்சம் டன் அளவிலான சுண்ணாம்புப் பாறைகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலையும் சிமென்ட் உற்பத்திக்காக தினமும் தலா 3 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. சில ஆலைகளுக்குள் உள்ள அனல்மின் நிலைய தேவைகளுக்காகவும் தனியாக ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் உறிஞ்சப்படுகிறது. இவை எல்லாம்தான் அரி யலூர் மாவட்ட மக்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன.
சிறுநீரகக் கோளாறு…
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் அருள்மொழிவர்மன், “பெரும்பாலான சுரங்கங்களை 300 அடிக்கும் கீழே தோண்டுவதால், முன்பு 50 அடி ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீர் இப்போது 250 அடிக்கும் கீழே போய்விட்டது. இதனால் நீரில் சுண்ணாம்புத் தன்மை அதிகமாகி குடிப்பதற்கு பயனில்லாததாகிவிட்டது. இந்தத் தண்ணீரைக் குடிப்பதால் தெருவுக்குப் 10 பேராவது சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். டயாலிசிஸ், சீறுநீரக கல் தொல்லை என சுரங்கப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். சுரங்கங்கள் மற்றும் ஆலைகளில் இருந்து வெளிப்படும் மாசு கட்டுப்படுத்தப்படாததால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறுகுழந்தைகளும் தப்பவில்லை” என்றார்.
குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகளிலிருந்து 50 மீட்டருக்குள் சுண்ணாம்புச் சுரங்கங்கள் தோண்டக்கூடாது என்பது உள்ளிட்ட மத்திய சுற்றுச் சுழல் மற்றும் வன அமைச்சகத்தின் விதிகள் எதுவுமே இங்கு முறையாக பின்பற்றப்படவில்லை.
சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், ஆறு, வரத்து வாய்க்கால்கள் இங்கெல்லாம் சர்வசாதாரணமாய் சுரங்கப் பணிகள் நடப்பதை நாம் கண்கூடாகவே பார்க்க முடிந்தது. சில கிராமங்களில் மயானங்களும் கோயில்களுமே தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
மணக்குடையான் கிராமத்திலிருந்து மருங்கூர் செல்லும் தார் சாலையை அடைத்துவிட்ட தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகம், அதற்குப் பதிலாக 2 கி.மீ. சுற்றி மாற்றுப் பாதையில் சாலை போட்டுக்கொடுத் திருக்கிறது. இதுகுறித்து அருள்மொழிவர்மன் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்திருக்கிறார். அதற்கு, எதற்காக சாலை மாற்றப்பட்டது என்பதற்கு விளக்கம் சொல்லாமல், ’சம்பந்தப்பட்ட தனியார் ஆலை நிர்வாகம் அரசு அனுமதிபெற்று சாலை அமைத்துள்ளது. அந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டில்தான் உள்ளது’ என்று புத்திசாலித்தனமாக பதில் கொடுத்திருக்கிறார் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்.
இதேபோல, தெத்தேரி கிராமத்தில் வெள்ளாற்றின் கரையில் சுரங்கக் கழிவுகளை கொட்டி ஆக்கிரமித்திருப்பதாக முதல்வர் தனிப்பிரிவுக்கு 2013-ல் கொடுத்த மனுவுக்கு, ‘அந்த ஆக்கிரமிப்பை அகற்றி அதற்கான செலவை சம்பந்தப்பட்ட ஆலையிடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொறுப்பாக பதில் கொடுத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். வருடம் மூன்றாகப் போகிறது, இன்னமும்தான் ஆக்கிரமிப்பை அகற்றுகிறார்கள்.
இதே பகுதியில், “காலாவதியான சுரங்கத்தை மூடுவதற்கு முதல்வர் தனிப்பிரிவிலிருந்து வந்த உத்தரவையும் யாரும் பொருட்படுத்தவில்லை” என்று சொல்லும் ஆதனக்குறிச்சியைச் சேர்ந்த கணேசன், “இங்கே தனியார் சிமென்ட் ஆலைகளின் அறிவிக்கப்படாத கொத்தடிமைகள் நாங்கள். நான்கு பக்கமும் சுண்ணாம்புச் சுரங்கங்கள் நடுவில் நாங்கள் வசிக்கிறோம்.
கால்சியம் அளவு 670 பி.பி.எம். கொண்ட இந்தத் தண்ணீரானது குடிக்கவே லாயக்கற்றது என நிபுணர்கள் சொல்கிறார்கள். எனக்கு நான்கு முறை சிறுநீரகத்தில் கல் அடைப்பு வந்துவிட்டது. துரைசாமி என்பவர் 2 வருடமாக டயாலிஸிஸ் செய்கிறார். அவருடைய அம்மா அலமேலு சிறுநீரக கோளாறால் 2 மாதங்களுக்கு முன்பு இறந்தார். டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த பாண்டுரங்கன் என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்” என்று அடுக்கிக் கொண்டே போனார்.
சின்னமேலக்குடிக்காடு என்ற ஒரு கிராமமே தனியார் சிமென்ட் ஆலைக்காக இடம்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இக்கிராமத்து மக்கள் தங்களது நிலங்களை தனியார் சிமெண்ட் ஆலைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே விற்றிருக்கிறார்கள். அவர்கள் குடியிருந்த பகுதியையும் விலைக்கு வாங்கிய ஆலை நிர்வாகம், இங்கிருந்தவர்களுக்காக இன்னொரு பகுதியில் ’மதுரா நகர்’ என்றொரு பகுதியையே உருவாக்கி அங்கே வீடுகளைக் கட்டித் தந்திருக்கிறது. மதுரா நகருக்கு 140 குடும்பங்கள் நகர்ந்துவிட்டாலும் பெரியசாமி, கந்தசாமி உள்ளிட்ட 13 பேரின் குடும்பங்கள் மட்டும் நிலங்களைத் தரமாட்டோம் என்று சொல்லி அங்கேயே இருக்கிறார்கள்.
அத்துமீறும் சிமென்ட் ஆலைகள்
ஆலைக்குள்ளும் ஏகப்பட்ட விதிமீறல்கள் நடக்கின்றன. ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை பெரும்பாலான ஆலைகள் சுத்திகரிப்பு செய்யாமலேயே ஆற்றில் விடுகின்றன. ஆலைப் புகையையும் அடைத்து வைத்திருந்து இரவு நேரங்களில் வெளியேற்றுவதாகச் சொல்கிறார்கள். இதனால் ஆலைகள் உள்ள பகுதிகளில் சுற்றுப்புறச் சூழல் சீர்கெட்டுள்ளது. சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிந்தே செல்லவேண்டிய நிலை. அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எடை 16 டன்னுக்கு பதில் 30 டன்வரை லாரிகள் ஏற்றிச் செல்கின்றன. இந்த லாரிகளால் சாலைகள் பழுதானதுடன், விபத்துகளும் உயிர் பலிகளும் அதிகரித்துவிட்டன.
கண்துடைப்புக் கூட்டங்கள்
“ஓரிடத்தில் சுண்ணாம்புச் சுரங்கம் தோண்டுவதற்கு முன்பாக அந்தப் பகுதி மக்களை அழைத்து கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்த வேண்டும். இதுகுறித்த தகவல்களை முன்னணி பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதுடன், அந்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் நடத்துவதற்கு முப்பது நாட்கள் முன்னதாகவே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும். இந்த விதிகளும் இங்கு பின்பற்றப்படுவதில்லை.
ஆலைகளுக்காக ஓடும் பெரும்பாலான லாரிகள் இப்பகுதி அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானதுதான். பல இடங்களில் ஊராட்சித் தலைவர்களையும் வளைத்து வைத்திருக்கிறார்கள். ஆலைகளின் செயல்பாடுகளால் கடந்த 25 ஆண்டுகளில் விவசாய, மேய்ச்சல் நிலங்கள், தண்ணீர் இவையெல்லாம் பாழாகி, மக்களின் உடல் நிலையும் உயிரைக் குடிக்குமளவுக்கு மோசமானதுதான் மிச்சம்” என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் ரமேசு கருப்பையா.
அரியலூர் சிமென்ட் ஆலைகளுக்கு எதிராக இத்தனை கொந்தளிப்புகள் இருக்க புதிதாக மூன்று இடங்களில் சுரங்கம் தோண்டுவதற்கு வரும் 20, 21, 22 தேதிகளில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறது ராம்கோ சிமென்ட் நிர்வாகம்.
இந்த சுரங்கங்களுக்கு எதிராக ஆட்களை திரட்டிக் கொண்டிருக்கும் கல்லங்குறிச்சியைச் சேர்ந்த கலியமூர்த்தி கூறியபோது, “கடந்த 25 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆலையும் விதிப்படி பசுமைப் பகுதிகளை உருவாக்கி இருந்தால் அரியலூர் மாவட்டமே இப்போது பசுஞ்சோலையாகி இருக்கவேண்டும். அப்படியா இருக்கிறது? இங்கு வந்து சிமென்ட் ஆலைகளின் சொகுசு மாளிகைகளில் தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்லும் அதிகாரிகள் இந்த ஒரு கேள்விக்கு முதலில் பதில்சொல்லட்டும். கண்டபடி சுரங்கம் தோண்டுவதால் அரியலூர் மாவட்டம் இப்போது நிலநடுக்க அபாயத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் நில அதிர்வுகள் ஏற்பட்டதுகூட இதன் தாக்கம்தான். இந்த லட்சணத்தில் இன்னமும் எதற்காக சுரங்கம் தோண்ட வருகிறார்கள். எஞ்சி இருக்கிற மக்களையும் அதில் போட்டு மூடுவதற்கா? இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக பேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அரியலூர் மாவட்ட துணைப் பொறியாளர் லட்சுமி, “நான் இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இதுவரைக்கும் நான் பார்த்த சுரங்கங்களில் பசுமைப் பகுதிகளை உருவாக்கியுள்ளனர். கூடிய சீக்கிரமே மற்ற இடங்களையும் பார்வையிட்டு, விதிமுறைகள் மீறி இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.
கனிமவளத் துறை மாவட்ட துணை இயக்குநர் சரவணன், “நான் இங்க வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. எவ்வளவு ஆழம் தோண்டணும்கிறது இடத்துக்கு இடம் மாறுபடும். இங்கே எந்த அடிப்படையில் சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை இனிமேல்தான் பார்க்கணும்” என்றார்.
சிமென்ட் ஆலைகள் சொல்வதென்ன
ராம்கோ சிமென்ட் ஆலையின் லேண்ட்ஸ் மேனேஜர் கண்ணனிடம் பேசியபோது, ’’சுரங்கத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் அவ்வப்போது இங்கு வந்து சுரங்கங்களை ஆய்வு செய்கிறார்கள். கடந்தவாரம்கூட இங்குவந்து பார்வையிட்ட மத்திய சுரங்கத்துறை துணை இயக்குநர் சிறந்த சுரங்க செயல்பாட்டில் இரண்டாம் இடத்துக்கான விருதை எங்கள் நிறுவனத்துக்கு அளித்திருக்கிறார். அப்படியிருக்க எந்தக் கம்பெனியுமே விதிகளை மீறமுடியாது. தங்களுக்கு தனிப்பட்ட முறையில் காரியங்கள் நடக்காமல் போன யாராவது குற்றஞ்சாட்டலாம். நாங்கள் விதிகளுக்குட் பட்டுத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
நம்மிடம் அதிகாரம் இல்லை: ஆட்சியர்
இறுதியாக, மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜிடம் பிரச்சினையை எடுத்துச் சென்றோம். அனைத்தையும் பொறுமையாக கேட்டவர், “அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் தோண்டினாலும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள நீர்தான் இடைக்கும். எனவே, சுண்ணாம்புச் சுரங்கங்களால்தான் தண்ணீர் கெட்டுவிட்டது, அதனால்தான் சிறுநீரக கோளாறுகள் வருகின்றன என்பதை ஏற்கமுடியாது. சிமென்ட் ஆலைகளுக்காக மக்கள் தாங்களே விரும்பித்தான் நிலங்களை விற்றிருக்கிறார்கள். இந்த இடத்தில் சுரங்கம் அமைக்கலாம் என சிபாரிசு செய்வது மட்டும்தான் மாவட்ட நிர்வாகத்தின் வேலை. அந்த அதிகாரமும் இப்போது இல்லை. இப்போது, சுரங்கம் அமைப்பதற்கு முன்பாக அந்தப் பகுதியின் மக்களிடம் கருத்துகளைக் கேட்டு அதை மத்திய சுரங்கத் துறைக்கு அனுப்பிவைப்பதோடு எங்கள் பணி முடிந்துவிடுகிறது. சிமென்ட் ஆலை லாரிகளால் சாலைகள் மோசமாக பழுதடைந்திருப்பது உண்மைதான். பழுதான சாலைகளை சிமென்ட் ஆலைகள் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், அந்த விதியை வலியுறுத்தி ஆணையிடும் அதிகாரம் நம்மிடம் இல்லை” என்றார்.
அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்
5 ஆண்டுகளில் லாரிகளால் நேரிட்ட விபத்துகள்…
கடந்த 5 ஆண்டுகளில் சிமென்ட் ஆலை வாகனங்கள் ஏற்படுத்திய விபத்துகளால் அரியலூர் மாவட்டத்தில் 5,362 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2014-ல் நடந்த விபத்துகளில் 153 பேரும், 2015-ல் நடந்த விபத்துகளில் 144 பேரும், 2016-ல் மார்ச் வரை நடந்த விபத்துகளில் 36 பேரும் பலியாகியுள்ளனர். 2014-ல் 22 பேரும் 2015-ல் 13 பேரும் மிக மோசமான விபத்துகளால் பாதிக்கப்பட்டு செயல்பாடு இழந்தார்கள். 2014-ல் 582 பேரும் 2015-ல் 637 பேரும் 2016 மார்ச் வரை 149 பேரும் சிமென்ட் ஆலை லாரிகள் ஏற்படுத்திய விபத்துகளால் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பி இருக்கிறார்கள். அச்சுறுத்தும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக கனரக வாகனங்களை பகல் நேரத்தில் இயக்கக்கூடாது என சார் ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி உத்தரவிட்டார். அவர் மாறுதலானதும் அவரது உத்தரவையும் காலாவதியாக்கி விட்டார்கள்.