சனி, 2 செப்டம்பர், 2017

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்! September 02, 2017

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்!


அரியலூர் மாணவி அனிதா தற்கொலையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்பும் நடைபெற்றன. 

அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போன விரக்தியில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் அரசு மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்று மாணவியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குழுமூரில் உள்ள திடலில் வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் கடும் அவதியடைந்தனர். 

மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக திருச்சியில் நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, தம்மால் இயன்றவரை போராடியதாகவும், அவரால் தாங்க முடியாத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதற்கு அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால் மாணவி அனிதா உயிரிழந்து விட்டதாக இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார். அனிதா உயிரிழப்பை கண்டித்து குழுமூர் பகுதியில் 100க்கும் மேற்பட்டோருடன் கவுதமன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கவுதமன், நீட் தேர்வால் இன்று மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை எஞ்ஜினியரிங் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

Related Posts: