செவ்வாய், 12 ஜூன், 2018

ஃபேஸ்புக்கில் ஊருக்கு செல்வதாக ஸ்டேட்டஸ் போட்டவரின் வீடு கொள்ளையடிக்கப்பட்டதால் அதிர்ச்சி..! June 12, 2018

Image

பெங்களூருவில் உள்ள ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் குறித்து அறிந்துகொண்டால் அடுத்த முறை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வதற்கு தயங்குவீர்கள்.. அப்படி என்ன தான் நேர்ந்தது அவருக்கு? தெரிந்துகொள்வோம்..

தமிழகத்தைச் சேர்ந்த பிரேமலதா, தனது சகோதர் லோகித் மற்றும் குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் RT நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

வாரஇறுதியையொட்டி சொந்த ஊரான தமிழகத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு ஊருக்கு கிளம்பிச் சென்ற பிரேமலதா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மீண்டும் பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது,  வீடே அலங்கோலமாக இருந்துள்ளது, வீட்டில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 57,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நேற்று RT நகர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

தனது ஃபேஸ்புக் பதிவைக்கண்ட யாரோ ஒருவர் தான் இத்திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக பிரேமலதா தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், அண்டை வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் இயங்காததால் கொள்ளையர்கள் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க அது வாய்ப்பாக மாறியுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களும் நம்முடைய நிகழ்நேர அனுபவங்கள் மற்றும் தகவல்களை பகிர வாய்ப்பாக இருந்தாலும், அத்தளங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதும் தற்போது அதிகரித்துள்ளது.

இதை சமூக விரோத சக்திகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ள நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இவற்றை கையாள வேண்டும் என்று இது போன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

திரைப்படங்களில் கூட இதைப்போன்று நகைச்சுவையாக ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது, தற்போது அவை நிஜத்திலும் அரங்கேறி வருவது கவலையளிப்பதாய் உள்ளது.

Related Posts: