கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக பரவலாக பெய்து வரும் மழையால், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை தாண்டியுள்ளது.
அணையிலிருந்து உபரி நீர் எந்நேரம் வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்பதால், பரளியாறு, தாமிரபரணியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 54 அடி உயரம் கொண்ட மாம்பழத்துறையாறு நீர்த்தேக்கமும் முழுகொள்ளளவை எட்டியதால், கரையோர மக்கள் மாற்று இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று பேச்சிப்பாறை அணையில் புணரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், அணையிலுள்ள நீர் சிற்றாறு, பட்டணங்கால்வாயில் திறந்துவிடப்பட்டுள்ளது. பட்டணங்கால்வாயில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால், பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழையால், தென்காசி அருகேயுள்ள 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார்கோயில் நீர்த்தேக்கம் 106 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் விவசாய பணிகளை துரிதப்படுத்தியுள்ள விவசாயிகள், நீர்த்தேக்கத்திலிருந்து உரிய நேரத்தில் தண்ணீரை திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.