பல்வேறு சந்தேகங்கள் மற்றும் ஊகங்களை தாண்டி, உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர், வடகொரிய அதிபர்களிடையேயான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இரு துருவங்கள் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் இன்று சந்தித்துக் கொண்டனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் கை குலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டதை உலகம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின. அப்போது NICE TO MEET YOU MR.PRESIDENT என ட்ரம்ப்பை பார்த்து கிம் தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார். இதனை கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர்.
45 நிமிடம் ஆலோசனை
பின்னர் இரு தலைவர்களும் கேப்பல்லா விடுதியில் உள்ள நூலக அறையில் 45 நிமிடம் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் உடனிருந்தனர். அதன் பிறகு இரு தலைவர்களுடன் சேர்ந்து அமெரிக்க உள்துறை செயலாளர் மைக் போம்பியோ, வெள்ளை மாளிகை அதிகாரி ஜான் எஃப் கெல்லி, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோரும் அதேபோல் வடகொரியா சார்பாக கிம் ஜாங் உன்னின் வலது கையாக கருதப்படும் கிம் யோங் சொல், வடகொரிய வெளியுறவுத்துறை செயலாளர் ரியோங் ஹா ஆகியோரும் இருந்தனர்.
முக்கியப் பேச்சு வார்த்தை
இந்த சந்திப்பின் போது வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவது, ஏற்கனவே தயாரித்த அணு ஆயுதங்களை அழிப்பது குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது. வடகொரியா-தென்கொரியா இடையேயான பகையை அதிகாரபூர்வமாக முடிவுக்கு கொண்டு வருவது, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெருவது, வடகொரியாவில் அமெரிக்க தூதரகத்தை அமைப்பது உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து
இதனிடையே, அணு ஆயுத ஒழிப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் முக்கிய ஒப்பந்தங்களுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், அதிபர் கிம் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.