புதன், 6 செப்டம்பர், 2017

காட்டுப்பகுதியில் வசித்துவந்த மக்கள் குப்பைக் கிடங்குக்கு அருகில் குடியமர்த்தப்பட்ட அவலம்..!! September 06, 2017

​காட்டுப்பகுதியில் வசித்துவந்த மக்கள் குப்பைக் கிடங்குக்கு அருகில் குடியமர்த்தப்பட்ட அவலம்..!!


போடிநாயக்கனூர் அருகே, காட்டுப்பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள், குப்பைக் கிடங்குக்கு அருகில் குடியமர்த்தப்பட்டுள்ளதால், பல்வேறு நோய்களால் அவதியடைந்து வருகின்றனர். 

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமமாகும். அங்கு பல ஆண்டுகளாகவே மலைவாழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்த அவர்கள், வனத்துறையின் நடவடிக்கைகள் கடுமையானதால், பிழைப்பு தேடி வெளியே வந்தனர். 

பின்னர், தங்களுக்கு மலைப்பகுதியில் தங்க இடம் ஒதுக்கித் தர வேண்டுமென அவர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், மலை பகுதியில் இடம் கேட்ட அவர்களுக்கு, போடியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறைக்காடு என்னும் இடத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டது. 

அந்த இடத்தில் கடந்த 2011ம் ஆண்டு 28 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், இவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்ட இடத்தின் அருகேதான், போடி நகராட்சியின் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. 

அந்தகுப்பைக் கிடங்கை அகற்றி விடுவோம் என, மாவட்ட நிர்வாகம் அப்போது உறுதியளித்த நிலையில், இதுவரை அது அகற்றப்படவில்லை. இதனால் சிறைக்காடு பகுதியில் குடியிருக்கும் மலைவாழ் மக்கள், தாங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

உணவுகளில் அதிகமான ஈக்கள் மொய்ப்பதாகவும், குப்பைக் கிடங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், வீடுகளில் தங்க முடிவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பேருந்து வசதி இல்லாததால், தங்களது பிள்ளைகள் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தோ அல்லது ஆட்டோகளிலோதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றும், சம்பாதிக்கும் பாதி பணம் அதற்கே சென்று விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

காட்டில் நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்த தாங்கள், தற்போது ஆரோக்கியத்தை இழந்து, நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதாகவும்,  தங்களுக்கு சுகாதாரமான இடத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் காட்டிற்கே திருப்பி அனுப்பி விடுமாறும் மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Related Posts: