வெள்ளி, 29 டிசம்பர், 2017

​மும்பை கமலா மில்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி! December 29, 2017

Image

மும்பையில் அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய மும்பையில், சேனாபதி பபத் மார்க் எனும் பகுதியில் உள்ள 4 மாடிகள் கொண்ட கமலா மில்ஸ் எனும் தொழிற்கூடங்கள் நிறைந்த காம்பவுண்டில் உள்ள ஒரு 4 மாடி கட்டடத்தின் 3ம் தளத்தில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவியது. 

வீடுகள், அலுவலகங்கள், உணவகங்கள் நிறைந்த இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீயில் கருகி 14 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தகவல் அறிந்த தீ அணைப்புத் துறையினர், விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அதற்குள்ளாக கட்டடத்தின் பெரும்பகுதி முற்றாக எரிந்து அதில் இருந்து இரும்புக் கம்பிகள் மட்டும் வெளியே தெரிகின்றன. 

தீ அணைக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்டடத்தை குளிர்ச்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தீ அணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த தீ விபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே பெரும்பான்மையாக மரணமடைந்துள்ளனர் என்பது சோக நிகழ்வாகும்.  

தீ விபத்து ஏற்பட்ட கட்டத்தின் அருகே முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ் நெட்வொர்க்கின் அலுவலகம் அமைந்துள்ளது, இதன் காரணமாக அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் சேனல்களின் ஒளிபரப்பு அனைத்தும் இன்று காலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.