வெள்ளி, 22 டிசம்பர், 2017

​2011ம் ஆண்டுக்கு பிறகு பதிவான அதிகபட்ச வாக்குகள்! December 22, 2017

Image


பல்வேறு திருப்பங்களுக்கு பின்னர் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததுள்ளது. 77.68 சதவீத வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகியுள்ளன.  

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக ஏப்ரல் 10ம் தேதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மீண்டும் பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்த நிலையில் இந்த முறையும் தேர்தல் ரத்துசெய்யப்படுமா என்கிற பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 258 வாக்குச்சாவடிகளில் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. வன்முறைச் சம்பவங்கள் எதுவுமின்றி ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. வாக்காளர்கள் முன்கூட்டியே வந்து நீண்ட வரிசையில் நின்ற சுமார் 20 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னரும் வாக்காளர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஓட்டுப்பதிவு  முடிந்த இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சென்னை ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலிருந்து இதுவரை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்கு சதவீதமாகும்.    கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்ட போது 67.69 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 

அதற்கு முன்பு ஜெயலலிதா இடைத்தேர்தலில் களம் கண்டபோது 74.59 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. அதே நேரத்தில் 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது ஆர்.கே. நகரில் 72.67 சதவிகித வாக்குகள் பதிவாகின.