கறுப்புப் பணத்தை கணினி கரன்சியான பிட்காய்னாக முதலீடு செய்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.
கடந்த வாரம் பிட்காயின் exchange-ல் ஈடுபடும் 9 நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வரை வரி ஏய்ப்பு செய்த பணத்தை பிட்காயினில் முதலீடு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் 22 ஆயிரம் பேருக்கு மேல் தமிழர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிட்காயின் என்றால் என்ன? அதில் இருக்கும் ஆபத்து மற்றும் ஆதாயம் பற்றி அலசுகிறது இத்தொகுப்பு.
2009ம் ஆண்டும் அறிமுகப்படுத்தியபோது 25 டாலராக இருந்த பிட்காயினின் மதிப்பு தற்போது 18,000 ஆயிரம் டாலருக்கு மேல் உள்ளது. அதாவது இந்திய மதிப்பின்படி ஒரு பிட்காய்னின் மதிப்பு 13 லட்சம் ரூபாய்.
இந்த பிட்காயின் அறிமுகமான போது இந்திய மதிப்பின்படி 4,500 ரூபாயை ஒருவர் இதில் முதலீடு செய்திருந்தால் இன்று அவர் 500 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். இப்படி நாளுக்கு நாள் பிட்காயினின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.
பண்டமாற்று முறையில் ஆரம்பம்பான வணிகம், பின்பு நாணய வடிவில் மாறியது, அந்த நாணயம் கரன்சி வடிவில் உருமாறியது. அதற்குப் பின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக பல்வேறு மாற்றத்திற்கு உள்ளான பணத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிதான் பிட்காயின்.
உலகம் முழுவதும் பணம் என்பது, அந்தந்த நாட்டு அரசாலோ அல்லது அவர்களது பிரதான வங்கியாலோ உருவாக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு நமது ரூபாய் விவகாரங்களை ரிசர்வ் வங்கி கையாள்கிறது. ஆனால், இந்த பிட்காயினோ எந்த வித அடையாளமும் இன்றி கணினி மூலம் தயாரிக்கப்படும் பணம். விர்சுவல் கரன்சி.
ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமென்றால் பான்கார்ட், ஆதார் கார்ட் என பல்வேறு விவரங்கள் கேட்கப்படுகிறது. ஆனால் பிட்காயினில் இது போன்ற ஒன்றும் கேட்கப்படுவதில்லை.
ஒரு கடையில் நாம் வாங்கும் பொருட்களுக்கு டெபிட் அல்லது கிரேடிட் கார்ட் மூலம் பணத்தை செலுத்துகிறோம். அந்த பணம் கடை உரிமையாளரின் வங்கி கணக்குக்கு செல்வதை விசா, மாஸ்டர் கார்ட் போன்ற மூன்றாம் நிறுவனம் உறுதிப்படுத்துகிறது. இதற்காக அந்நிறுவனங்களுக்கு ஒரு தொகை கொடுக்கப்படுகிறது.
இது போன்ற 3வது நிறுவனத்தின் உதவியின்றி, பண பரிவர்த்தனை செய்யும் வகையில் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக சதோஷி நாகமோடோ என்பவர் 2008ம் ஆண்டு அறிவித்தார்.
கணினியில் உள்ள அல்கோரிதம் வகை கணிதத்தை பயன்படுத்தி பிட்காயின்கள் உருவாக்கப்படுகிறது. இந்த வழிமுறையில் பிட்காயின் உருவாக்குவதை மைனிங் என்று கூறப்படுகிறது. அத்துடன் அதிக பட்சமாக 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியிடப்படும் பிட்காயின் அளவு ஒவ்வொரு 4 வருடத்துக்கும் குறைந்துகொண்டே இருக்கும். அதாவது தற்போது உள்ள முறையில் 10 நிமிடத்துக்கு 12.5 பிட்காயின்கள் வழங்கப்படுகிறது. அதே 4 வருடங்கள் கழித்து 10 நிமிடத்துக்கு 6.25 பிட்காயின்கள் மட்டுமே வழங்கப்படும்.
பிட்காயின் வைத்திருப்போர் அதற்கென ஒரு மெய்நிகர் பணப்பையையும் உருவாக்கி அதில் பிட்காயினை வைத்திருப்பார்கள். இந்த மெய்நிகர் பணப்பைக்கு ஒரு PASSWORD உண்டு. இதில் பிட்காயினை போட ஒரு வழி, எடுக்க ஒரு வழி
ஒரு வாடிக்கையாளர் பொருளை வாங்கியதும், அதற்கான பிட்காயினை அவரது மெய்நிகர் பணப்பையிலிருந்து விற்பனையாளரின் மெய்நிகர் பணப்பைக்கு மாற்றிவிடுவார்.
ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் எல்லா பிட்காயின் பயன்பாட்டாளர்களுக்கும் தெரியும் வகையில் வங்கி பாஸ்புக் போன்ற ஒரு
பேரேட்டில் பதிவு செய்யப்படும். இதற்கு பெயர் BLOCK CHAIN. இதனால் கணக்கில் வராத கருப்பு பிட்காயின் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
2009ம் ஆண்டு இந்த மெய்நிகர் பணத்தின் பயன்பாடு தொடங்கியதிலிருந்து இதுவரை 12 புதிய மெய்நிகர் பணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனினும் புழக்கத்தில் இருக்கும் மெய்நிகர் பணங்களில் 90 சதிவிகிதம் பிட்காயின் மட்டுமே.
இதை பயன்படுத்துபவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டிருப்பதால், இதில் உள்ள தகவல்களை ஒரு அரசாங்கம் பெற வேண்டுமென்றால் அதனைப் பயன்படுத்தும் அனைவரது அனுமதியும் பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உலகம் முழுவதும் இதன் பயனர்கள் இருப்பதால் இது சாத்தியமில்லை. இதனால் இதற்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தைத் தர பல அரசாங்கங்கள் தயங்குகின்றன.
2013ம் ஆண்டு இந்தியாவில் பிட்காயின் குறித்த பேச்சு எழுந்த போது, அதை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை என அப்போதைய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்தார்.
அதற்குப் பின் இதுவரை பிட்காயினை இந்தியர்கள் பயன்படுத்தி வந்தாலும், எந்த விதிமுறையும் அரசால் விதிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது கறுப்புப் பணத்தை பிட்காய்னாக முதலீடு செய்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக துரிதமாகதிட்டங்களை வரித்துறையினர் வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர் இந்த பிட்காயினில் முதலீடு செய்துள்ளனர் என்றும் இதன் காரணமாக இவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.