சனி, 23 டிசம்பர், 2017

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு! December 23, 2017

Image

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்தின் உள்ளேயே குறைந்த கட்டணம்பெறும் கிட்டங்கிக்கு மாற்ற அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும், 6 மாதத்திற்குள் மூடவேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ஆட்சியர்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் புதிதாக மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை பாதுகாக்க நாளொன்றுக்கு 6 லட்சம் வரை செலவாவதாக தெரிவித்துள்ளனர்.

இதுவரை 1 கோடியே 71 லட்சம் செலுத்த வேண்டும் என துறைமுகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், கட்டணம் குறைவான கிட்டங்கிக்கு மணலை மாற்ற அனுமதிக்க கவேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, முறைகேடான மணல் விற்பனையை தடுப்பதற்காகவே, மணலை எடுக்க அனுமதிக்கவில்லை எனவும் இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மணலை மாற்ற அனுமதிக்கக் கூடாது எனவும் கோரப்பட்டது.

அவ்வாறெனில், மணலை மாற்றுவதற்கு ஆகும் தொகையை அரசு வழங்க உத்தரவிடலாமா என கேள்வி எழுப்பிய நீதிபதி, குறைந்த கட்டணம் வசூலிக்கும் கிட்டங்கிக்கு மணலை மாற்ற உத்தரவிட்டார். மேலும் மணலுக்கு தொழில்பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.