திங்கள், 18 டிசம்பர், 2017

பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்ததே காங்கிரஸின் வெற்றி: அரசியல் விமர்சகர்கள் December 18, 2017

Image

குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட போதிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் முந்தைய தேர்தலை விட அதிக தொகுதிகளை பிடித்திருக்கிறது. இரண்டு தேசிய கட்சிகளுக்குமே குஜராத் தேர்தல் சாதக, பாதகங்களை கொடுத்திருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரை, 22 ஆண்டுகாலம் ஆட்சிக் கட்டிலில் இருந்த போதிலும் Anti-incumbency எனப்படும் அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி பெரியளவில் ஏற்படவில்லை என்பதையே குஜராத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. 

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்தியது போன்ற காரணங்களால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை குஜராத் வெற்றி மூலம் பொய்யாக்கியுள்ளது பாரதிய ஜனதா. 

குஜராத்தின் நகர்ப்புறங்களில் தற்போதும் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கே அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது. பாரதிய ஜனதாவின் கோட்டையாக கருதப்படும் அகமதபாத், சூரத், ராஜ்கோட் ஆகிய மண்டலங்களில் இந்த சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கோலோச்சியிருக்கிறது.

குஜராத்தில் முஸ்லிம் மக்கள் மற்றும் படேல் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளிலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தொடர்கிறது. கடந்த தேர்தலில் 115 தொகுதிகளைக் கைப்பற்றி இமாலய வெற்றியை பதிவு செய்த பாரதிய ஜனதா கட்சி தற்போது 103 அல்லது 104 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனத் தெரிகிறது. 

எனினும், ஆட்சியமைக்க தேவையான 92 இடங்களுக்கும் அதிகமாக 10 இடங்களை வைத்திருப்பதால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு குஜராத்தை பாரதிய ஜனதா கட்சியால் சிக்கலின்றி ஆட்சி செய்ய முடியும்.

காங்கிரஸ் கட்சிக்கான சாதக அம்சங்கள் என்று பார்த்தால், குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க முடியாது என்ற எண்ணத்தை ராகுல் காந்தி தகர்த்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

குஜராத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கைப்பற்றியதை விட கணிசமான அளவு கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் தற்போது கைப்பற்றியிருக்கிறது. பிரதமர் மோடி முதலமைச்சராக பல ஆண்டுகள் பதவி வகித்த குஜராத்தில், பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியும், சவாலும் கொடுத்ததன் மூலம் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் புத்துணர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மெவானி மற்றும் அல்பேஷ் தாக்கூர் ஆகியோர் அளித்த ஆதரவும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுத்திருக்கிறது என்றுதான் முடிவுகள் சொல்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 61 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது 77 இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளது, குஜராத்தில் அதன் வளர்ச்சியை காட்டுவதாக அமைந்திருக்கிறது.