புதன், 20 டிசம்பர், 2017

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு! December 20, 2017

















Image

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்ற தினகரன் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேல் செய்தியாளர்கள் முன்னிலையில் இந்த வீடியோவை வெளியிட்டார். செய்தியாளர்களிடம் தனது செல்போனில் உள்ள 20 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோவை போட்டும் காட்டினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள சூழலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதில் அரசியல் ஆதாயம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதை அரசியலுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்றும் வெற்றிவேல் கேட்டுக் கொண்டார்.

ஜெயலலிதா ஆபத்தான உடல்நிலையில்தான் சென்னை கிரீம்ஸ்ரோடு அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், சட்டஒழுங்கு பிரச்னையை தவிர்க்கவே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டதாகவும்  அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி கடந்த சில தினங்கள் முன்பாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தரப்பில் சிகிச்சை வீடியோ வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போது, அது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், சிகிச்சையின் போது ஜெயலலிதா நைட்டியில் இருந்ததாலும், உடல் எடை குறைந்து காணப்பட்டதாலுமே வீடியோ காட்சிகளை வெளியிடவில்லை என கடந்த செப்டம்பர் மாதத்தில் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் சிகிச்சை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் கோளாறால் திடீரென அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 5ந் தேதி ஜெயலலிதா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது தேர்தல் விதிமுறை மீறல் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி தெரிவித்துள்ளார்.