வியாழன், 21 டிசம்பர், 2017

நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு! December 21, 2017

Image

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி இத்தீர்ப்பை அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக தெரிவித்த நீதிபதி ஓ.பி. ஷைனி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றைகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. 

இதனையடுத்து, அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா உள்ளிட்ட தனி நபர்கள், நிறுவனங்கள் என 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் தொடர்புடையவர்களை விசாரித்து தீர்ப்பளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 

கடந்த 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஓ.பி. சைனி நியமிக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். இதனால், இந்த தீர்ப்பு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ. பி. ஷைனி, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். 

இதனிடையே, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக சிபிஐ தெரிவித்துள்ளது. தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு, அது ஆராயப்பட்டு மேல் முறையீடு செய்யப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.