புதன், 20 டிசம்பர், 2017

மீனவர்களின் மீட்பு பணியில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு! December 19, 2017

Image

ஓகி புயலின் போது காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

கடந்த மாதம் 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஓகி புயலில் சிக்கி தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சுமார் 680 மீனவர்கள் காணாமல் போயினர். இதில் பலர் மீட்கப்பட்ட நிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டன. ஆனால், சுமார் 580 மீனவர்களை காணவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்ததையடுத்து கடலோர காவல் படையினர் மற்றும் இந்திய கப்பற்படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டது. எனினும், அதன் பிறகு நூற்றுக்கும் குறைவானவர்களே மீட்கப்பட்டனர். 

இந்நிலையில் காணாமல் போன 20 நாட்களுக்கு பிறகு கச்சத்தீவு அருகே தவித்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களை தூத்தூர் கிராம மீனவர்கள் மீட்டுள்ளனர். 112 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தங்களை ஓகி புயல் தாக்கியதாகவும், 20 நாட்களாக கடலில் உதவியின்றி தவித்த தங்களை மீட்க கடலோர காவல் படையோ, இந்திய கடற்படையோ வரவில்லை எனவும் மீட்கப்பட்ட மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் மீட்பு பணியில், தற்போதும் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாகவே மீட்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.