வரும் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சித் தொடங்கி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
கடந்த 6 நாட்களாக ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த். இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த் அரசியலில் நுழைய தனக்கு பயமில்லை என்றும் யுத்தம் செய்வதற்கான நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்தார்.
பணத்திற்காகவும், புகழுக்காகவும் தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அப்படியென்றால் 1996-லேயே அரசியலில் குதித்திருப்பேன் என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசையால் அரசியலுக்கு வரவில்லை என்றும், 45 வயதில் தனக்கு இல்லாத ஆசை ஏன் 68 வயதில் வரப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
கடந்த ஒரு வருடமாக தமிழக அரசியலில் நடைபெற்ற சம்பவங்கள் மக்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியதாக தெரிவித்த ரஜினிகாந்த் ஜனநாயகம் சீர் கெட்டு விட்டதாக தெரிவித்தார். மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பற்றி கேவலமாக நினைப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் தனக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்ததாகவும், அதை செய்யாவிட்டால் தனது வாழ்நாள் முழுவதும் அந்த குற்ற உணர்வு தன்னை வருத்தியிருக்கும் என்று தெரிவித்த ரஜினிகாந்த், ஒட்டு மொத்த சிஸ்டமும் கெட்டு விட்டதாகவும் அதனை மாற்ற ஜாதி, மதச் சார்பற்ற ஆன்மிக அரசியலை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.
அரசியல் கட்சி தொடங்குவது சினிமாவை போல் சாதாரண விஷயமல்ல என்று தெரிவித்த ரஜினிகாந்த ஆண்டவன் அருளோடும் மக்களின் ஆதரவோடும் நிச்சயம் இது சாத்தியம் என்று தெரிவித்தார். தான் மக்களின் ஒரு சாதாரண பிரதிநிதியாக மட்டுமே செயல்படுவேன் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து இதனை செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து மூன்றே ஆண்டுகளுக்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ராகவேந்திரா மண்டபத்திற்கு வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் மாடியில் இருந்து தனது ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அதனை தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பிற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார்.