திங்கள், 25 டிசம்பர், 2017

கீழ்வெண்மணி படுகொலை நினைவு தினம் இன்று! December 25, 2017

கூலி உயர்த்தி கேட்டதற்காக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், என 44 பேரை ஒரே குடிசையில் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி நினைவு தினம் இன்று.

இந்தக் கோர படுகொலை சம்பவம் நடைபெற்று 50 ஆண்டுகளை நெருங்கினாலும், கீழ்வெண்மணி கிராம மக்கள் மனதில் அழியா சுவடாகவே இருந்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு..

தற்போதைய  நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது, "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்தது. 
அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட அக்காலத்தில், கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக, 1968 டிசம்பர் 25-ம் தேதி, நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் ஆவேசத்துடன் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாய தொழிலாளர்களை, நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் சிதறி ஓடினார்கள். அவர்களில் பலர் "ராமையன்" என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். 

8 அடி நீளம், 5 அடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 44 பேர் ஒளிந்திருந்தனர். நிலச்சுவான்தாரர்களின் ஆட்கள், ஈவு இரக்கமின்றி அந்த குடிசைக்கு தீ வைத்ததில், கர்ப்பிணி பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கீழ்வெண்மணி படுகொலை சம்பவம், 49 ஆண்டுகளை கடந்துவிட்டதால், அந்த கலவரத்தை பார்த்தவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் குறைந்த அளவே, வெண்மணி கிராமத்தில் தற்போது பார்க்க முடிகிறது. ஆனால், வருடா வருடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வெண்மணி கிராமத்தில் உள்ள, உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1968-ஆம் ஆண்டு நடந்த அந்த கோர சம்பவத்தில், குண்டடிப்பட்டு உயிர் பிழைத்த முனியன் என்பவர், கீழ்வெண்மணி படுகொலையை விவரித்தது, அதன் கொடூரத்தை படம்பிடித்துக் காட்டியது.

கீழவெண்மணி படுகொலை தொடர்பாக 106 பேர் கைதானார்கள். "இது சாதிய மோதல்" என காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையானார்கள். கீழ்வெண்மணி படுகொலை சம்பவம் அரை நூற்றாண்டை நெருங்கினாலும், அந்த கிராம மக்களின் மனதில், இச்சம்பவம் இன்னும் ஆறாத ரணமாகவே உள்ளது.
Image