உதகையில் பனிப்பொழிவு தொடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும், நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை, பனிப்பொழிவு இருக்கும். ஆனால் நடப்பாண்டு நவம்பரில் பருவ மழை தொடர்ந்து பெய்ததால் தற்போது தாமதமாக பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியஸ் பதிவானதால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.
காலை 9 மணிக்குப் பிறகே பொதுமக்கள் வெளியில் நடமாட முடிந்தது. ஆனால் மினி காஷ்மீர் போல காட்சியளித்த உதகையை, உற்சாகத்துடன் கண்டுகளித்த சுற்றுலா பயணிகள், புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
பச்சை புல்வெளிகளில் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல், உறைபனிப்பொழிவு இருந்த காட்சி, ரம்மியமாக இருந்தது. பனிப்பொழிவு தொடர்ந்தால், மலைக் காய்கறிகள் மற்றும் தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.