மேகாலயா ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 8 எம்எல்ஏக்கள், பாஜக கூட்டணியில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேகாலயாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக முகுல் சங்மா உள்ளார். மொத்தமுள்ள 60 சட்டசபை உறுப்பினர்களில், காங்கிரசுக்கு 30 எம்எல்ஏக்கள் இருந்தனர். இந்நிலையில் காங்கிரஸை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா செய்தனர்.
இவர்களுடன், கூட்டணி கட்சி மற்றும் இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 8 பேர், ஒரே நாளில் ராஜினாமா செய்ததால், மேகாலயா அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 8 பேரும் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் 9 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன், காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி பெற்று, ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. மேகாலயா சட்டசபையின் பதவி காலம், வரும் 2018 மார்ச் மாதம் நிறைவடைகிறது.
எனவே மேகலாயாவில் சட்டப்பேரவை தேர்தலை முன்வைத்து, பாஜக பரமபதம் ஆட்டத்தை தொடங்கி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்