சனி, 30 டிசம்பர், 2017

​சந்திரனின் துருவப் பகுதியில் சந்திராயன்-2 விண்கலம் ஆராய்ச்சி! December 30, 2017

Image

உலகிலேயே முதன்முறையாக, சந்திரனின் துருவப் பகுதியில் சந்திராயன்-2 விண்கலத்தை தரையிறக்கி, ஆராய்ச்சி நடத்த உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். 

திருச்சி மாநகராட்சி சார்பில், தூய்மை இந்தியா தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், திருச்சி மாநகராட்சியின் தூய்மை குறித்து. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த பாடலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை வெளியிட்டார். 

தூய்மையை கடைபிடித்து வரும் பள்ளி, அடுக்குமாடி குடியிருப்பு, நட்சத்திர ஓட்டல் ஆகியவற்றுக்கு, விருதுகளும் வழங்கப்பட்டன. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாத்துரை, சந்திராயன்-2க்கான இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவித்தார். 

அனைத்து நாடுகளும் சந்திரனின் மையப்பகுதியில் தான் விண்கலத்தை இறக்கி ஆராய்ச்சி மேற்கொண்டதாகவும், ஆனால், முதன் முறையாக சந்திரனின் துருவப் பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார். 

ஆண்டு தோறும் 12 செயற்கைக் கோள்களை நாம் விண்ணிற்கு ஏவி வருவதாகவும், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 18ஆக உயர்த்தப்படும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.