வியாழன், 28 டிசம்பர், 2017

​ஓகி புயல் பாதிப்புக்கு 133 கோடி நிதி ஒதுக்கீடு! December 28, 2017

Image

ஓகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு தமிழகம் வந்தது. இக்குழுவினர் மூன்று மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். மத்திய நீர்வள மேம்பாட்டுத்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

முதற்கட்டமாக எஸ்.சி.ஷர்மா, நாகமோகன் ஆகியோர் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாகமோகன், நாளை மற்றும் நாளை மறுநாள் 3 மாவட்டங்களை பார்வையிட உள்ளதாகவும், வரும் 29ம் தேதி தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். குமரி மாவட்டத்தை பார்வையிட, குழுவின் பிற உறுப்பினர்கள் அங்கு சென்றிருப்பதாக கூறினார். 

மேலும், ஓகி புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 133 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய குழு சேத விவரங்களை மதிப்பிட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையில், கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.