
வேதாரண்யம் அருகே சம்பா சாகுபடியை காப்பாற்ற டேங்கர் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மனக்காடு, கரியாப்பட்டினம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
காவிரி நீரை நம்பி சாகுபடி செய்தநிலையில், தண்ணீர் இன்றி விவசாயிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கதிர் அறுக்கும் நிலையில் உள்ள நெற் பயிர்களை காப்பாற்ற, டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வாங்கி வயல்வெளிக்கு பாய்ச்சும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
டேங்கர் லாரி மூலம் ஒரு சுற்றுக்கு 800 ரூபாய் வீதம் தண்ணீர் வாங்குவதால், தங்களின் கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அரசு, தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.