
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்மாலா கிராமத்தில் உள்ள தெருவோர தேநீர் கடையில் அமர்ந்து ராகுல் காந்தி பஜ்ஜி சாப்பிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பிரதமர் மோடியால், உறுதியளித்தபடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சீனா 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் போது, வெறும் 500-க்கும் குறைவான வேலை வாய்ப்புகளையே பாஜக அரசால் உருவாக்க முடிந்துள்ளதாக கூறினார். ஊழல் குறித்து பாஜக தலைவர்கள் பேச விரும்பினால், முதலில் தங்களது ஊழல்களுக்கு பதிலளியுங்கள் எனவும் ராகுல்காந்தி விமர்சித்தார்.
இதனிடையே, பரப்புரை முடிந்து கல்மலா கிராமம் வழியாக சென்ற ராகுல்காந்தி, தெருவோர தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து, பஜ்ஜி சாப்பிட்டார். உடன் வந்த முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரும் அவருடன் பஜ்ஜி சாப்பிட்டனர். தெருவோர கடைக்கு வந்து ராகுல்காந்தி பஜ்ஜி சாப்பிட்டது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.