
மதிப்புமிக்க கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் நாட்டின் முதல் அணிந்து கொள்ளும் விதமான உடல்சோதனை கருவிக்கான ஆல்கரிதத்தை (Algorithm) உருவாக்கி சாதனை படைத்துள்ளது. Vin cense என்ற கருவி இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
Vin cense என்றால் என்ன?
மொபைல் மருத்துவ தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வரும் MedIoTek Health Systems என்ற நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் அப்ளைடு மெக்கானிக்ஸின் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் பிரிவின் Touch lab பிரிவின் தலைமை வகிக்கும் விரிவுரையாளர் மணிவன்னண் தலைமையிலான குழு இந்த சாதனத்தை தயாரித்துள்ளது.
இக்கருவி நமது உடலின் பல்ஸ் ரேட், ஆக்கிஜன் அளவு, சுவாச விகிதம், தோலின் வெப்பநிலை, ரத்த அழுத்தம் மற்றும் இதர முக்கிய உடல்நிலை தொடர்பான அளவீடுகளை பதிவு செய்து சேமித்து வைத்துக்கொள்கிறது.
இந்த அதிமுக்கியத் தகவல்கள் பாதுகாக்கப்பட்ட இணைய மேகங்களில் (Cloud) சேமித்து வைக்கப்படுகின்றன. மருத்துவ சேவை அளிப்போர் இந்த தகவல்களை அணுகி பெற்றுக்கொள்ளும் வசதியினை இந்த கருவி நமக்கு அளிக்கின்றது.
இதன் மூலம் நோய் கண்டறிதல், உடல் நிலை பரிசோதனை, பொது உடல்நலம் ஆகியவையுடன் சமூக ஆரோக்கியமும் பேணும் வசதிகள் சாத்தியப்படுகின்றன.
இது தொடர்பாக MedIoTek Health Systems-ம் நிர்வாக இயக்குநர் சர்மிளா தேவதாஸ் கூறுகையில், ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து சமூக ஆரோக்கியம் பேணும் வகையிலான மருத்துவத் துறைக்கு உதவும் கருவிகளை ஆராய்ச்சி செய்து உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது உற்சாகத்தை தருவதாக குறிப்பிட்டார்.