செவ்வாய், 13 மார்ச், 2018

குரங்கணி தீ விபத்தில் தமிழக அரசு மீது சீமான் சந்தேகம்! March 12, 2018

Image

குரங்கணியில் தீயைக் அணைக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை எனவும் நீயூட்ரினோ ஆய்வுக்காக இவர்களே தீயை வைத்திருப்பார்கள் என்று தங்களுக்கு சந்தேகம் எழுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலைப் பாதைகளில் சோதனைச் சாவடி இருக்கும் போது இவர்கள் எப்படி போனார்கள் என்றும் காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள், குறிப்பாக இவ்வளவு காலம் இல்லாத பெரும் தீ எப்படி உருவானது என கேள்வி எழுப்பினார். 

மேலும் நீயூட்ரினோ ஆய்வின் காரணமாக திட்டமிட்டு இவர்களே கொளுத்தி விட்டார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. என்று தெரிவித்த அவர், அனுமதி கேட்காமல் உள்ளே சென்றார்கள் என்று அதிகாரிகள் சொல்வது பொறுப்பற்ற பதில் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக இந்த தீ விபத்தைக் வைத்து யாரையும் காட்டிற்குள் விடமாட்டார்கள். இதைக் காரணம் வைத்து யாருக்கும் தெரியாமல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீயூட்ரினோ ஆய்வை மேற்கொள்வார்கள் என தெரிவித்த சீமான், பேரிடர் எழும் போது அதில் தற்காத்து கொள்ள அரசு என்ன  நடவடிக்கை எடுக்க முயற்சி செய்திருக்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் ரஜினி போராட மாட்டார், அறிக்கை விடமாட்டார். கமல் சொல்வது போல ரஜினி எல்லா விதத்திலும் நழுவி கொண்டு முதல்வர் ஆகிவிடுவார் என தெரிவித்த அவர், பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் அரசுக்கு எவ்வித ஆபத்துமில்லை எனவும் அவர் கூறினார்